மொஹரம் விடுமுறைதினம் 24 ஆம் தேதியாக மாற்றம்

041220113376_1

இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் மொஹரம் தினமானது, வரும் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) வருவதால், அன்றைய தினம் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக அரசு ஆண்டுதோறும் வெளியிடும் அரசு விடுமுறைப் பட்டியலில் மொஹரம் அக்டோபர் 23 ஆம் தேதி எனவும், அன்றைய தினமே அரசு விடுமுறை எனவும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, தமிழக அரசின் பொதுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து, மொஹரம் விடுமுறை தேதி  மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆண்டு மொஹரம் மாதத்தில் தொடங்குகிறது. மொஹரத்தின் முதல் நாள் என்பது வானில் தெரியும் முழு நிலவைப் பொருத்தே கணக்கிடப்படுகிறது. நிலவு தெரியும் நாள் முதல் நாள் எனவும், அந்த நாளில் இருந்து 10 ஆவது நாளே மொஹரம் நாள் என்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த 10 நாட்களிலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவார்கள். மேலும், ஒன்பது-  பத்தாவது நாள்களில் நோன்பு இருப்பர்.

நிலவு தெரிந்தது எப்போது: தமிழகத்தில் முழு நிலவு தெரிந்தது கடந்த 14 ஆம் தேதியாகும். எனவே, அன்றைய தினத்தில் இருந்து பத்தாவது நாளான அக்டோபர் 24 ஆம் தேதி மொஹரம் கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைக் காஜி கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, வரும் 24 ஆம் தேதியன்று மொஹரம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினமே அரசு விடுமுறை விடப்படும்.

அக்டோபர் 13 ஆம் தேதியன்று முழுநிலைவு தெரியும் என்று முன்னர் கணக்கிடப்பட்டதால், மொஹரம் வரும் 23 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முழு நிலவு தெரிந்த தேதி மாறியதால், இப்போது மொஹரம் வரும் 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.