நாஞ்சில் மீன் குழம்பு

நாஞ்சில் மீன் குழம்பு

 

 

தேவையான பொருட்கள்  :

 

மீன்    – 6 துண்டுகள்

புளி    – சின்ன எலுமிச்சம் பழ அளவு

உப்பு   – தேவையான அளவு

 

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்  :

 

தேங்காய் துருவல்      – 1/4 கப்

பெரிய வெங்காயம்     – 1

மல்லி விதை           – 3 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய்       – 10

பெருஞ்சீரகம்           – 1 மேசைக்கரண்டி

மிளகு                  – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை          – 1 பிடி

 

தாளிக்க தேவையான பொருட்கள்  :

 

எண்ணெய்      – 1 மேசைக்கரண்டி

வெந்தயம்      – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

  1. மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். புளியை ஒரு குழியான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் புளிக்கரைசல் தனியாக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் இரண்டு பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி போட்டு கலக்கி வைக்கவும்.

 

  1. பெருஞ்சீரகம், மல்லி ,மிளகு, காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி வைக்கவும். அப்போது தான் வறுப்பதற்க்கு சுலபமாக இருக்கும்.

 

  1. கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலையும் வறுக்க தேவையான இதர பொருட்களான பெரிய வெங்காயம், மல்லி விதை, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், மிளகு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வறுக்கவும். தேங்காய் நன்றாக சிவந்த நிறமாக உதிரியாக வரும் வரை வறுக்கவும்.

 

  1. இதை சற்று நேரம் ஆற விட்ட பிறகு மிக்ஸியில் ஒன்றாக தண்ணீர் சேர்க்காமல் கரகரவென்று நன்றாக பொடியக்கி அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

 

  1. கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். குழம்பு வைக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை முதலில் தாளிக்கவும். வெந்தயம் வறுப்பட்டதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை தாளிப்பில் ஊற்றவும்.

 

  1. குழம்பு கொதிக்க ஆரம்பித்து பச்சை வாடை போனதும் கழுவிய மீன் துண்டுகளை சேர்க்கவும். மூடியை கொஞ்சம் ஆவிபோகுமாறு மூடவும் குழம்பை அப்படியே கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்கள். பிறகு திறந்து சரி பார்த்து இறக்கவும். சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.