இனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை

ramanan (1)

வேறு எந்த அரசு அதிகாரியும் இந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டார்கள்.  இந்த வகையில் கலெக்டர் சகாயம் மற்றும் வானிலை அறிக்கையாளர் திரு. ரமணன் இவர்கள் மட்டும் விதிவிலக்கு.  மழை, புயல் என்று வந்து விட்டால் போதும். எல்கேஜி முதல் பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ரமணனின் திரு வாய் திறந்து சொல்லப்போகும் வானிலை அறிக்கையை கேட்காமல் விடுவதில்லை.

செய்தி என்றாலே சேனலை மாற்றும் டீன் ஏஜ் கள் கூட ரமணனின் வெதர் ரிப்போட்டை பார்த்துவிட்டுதான் மாற்றுவார்கள்.  எங்கடா நம்ம மாவட்டத்தில் மழைபெய்யும் என்று சொல்லிவிட மாட்டாரா….என்று ஏக்கம்.  இந்திய – பாக் கிரிக்கெட் மாதிரி பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இப்படி மீடியாக்கள் வழியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ரமணன் இந்த மாதம் 31 ம் தேதியோடு பணிக்காலம் முடிக்கின்றார். அவரைப்பற்றி சில செய்திகளை காண்போம்.

ரமணன் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். விவேகானந்தா கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் படித்த ரமணன், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி, படித்த கையோடு, மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இதனால், இந்திய வானிலை ஆய்வு துறையில், சீனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின் வேலை பார்த்துக் கொண்டே சென்னை பல்கலையில், பிஎச்.டி., முடித்து டாக்டர் ஆனார். இதன்பின், பல பதவி உயர்வு தேர்வுகளை எழுதி, இயக்குனராக பணி காலத்தை நிறைவு செய்கிறார்.

இவரின் ஸ்பெசல் என்ன வென்றால் சுருக்கமாக வானிலை அறிக்கை கூறுவது தான்.  மக்களை பதற்றம் அடையச்செய்யாமல் புயலே வந்தாலும் குறைந்த காற்றலுத்த மண்டலம் என்றும் அதிக காற்றழுத்த மண்டலம்  என்ற ஸ்டைலில் ரத்தினச் சுருக்கமாக வானிலை அறிக்கையை கூறுவதில் வல்லவர் ரமணன். ரியாக்‌ஷன்களை முகத்தில் காட்டாத, வித்தியாசமான வானிலை உச்சரிப்பால் ரமணன் சினிமா, பட்டிமன்றம், சமூகவலைதளங்கள் என்று அனைத்து மீடியாக்களிலும் அவரின் சம்பாஷனைகள் இடம் பெறுவதுண்டு. தனக்கென்று பாணியை உருவாக்கிக்கொண்டார்.  கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளத்தோடு, ரமணன் மீதான நம்பிக்கையையும் சேர்த்து கொண்டு வந்தது எனலாம்.

மழைக்கடவுள் வர்ண பகவானின் தம்பி இந்த ரமணன் என கொண்டாடின சமூகவலைதளங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக உயர்ந்தார் ரமணன். ‘மழை வரும்’ என ரமணனின் வாயில் இருந்து ஒற்றை வார்த்தை வராதா என பள்ளிக் குழந்தைகள் தவமாய் தவமிருந்தன என்றால் மிகையில்லை. மீம்ஸ் மன்னராகவும் வலம் வந்தார் ரமணன்.

ஊருக்கெல்லாம் ‘மழை வரும் உஷாரா இருங்க’ என உபதேசம் சொன்ன ரமணனும் மழையின் பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. ஒரு மழை நாளில் தான் ரமணனின் மகள் திருமணம் நடைபெற்றது. எதிர்பார்த்த கூட்டமே வராமல் மண்டபம் காலியாகக் கிடந்தது.19-1447909088-ramamna-troll-600

இதேபோல், கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது, ரமணனும் வெள்ளத்தில் சிக்கினார். தியாகராய நகரில் அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பும் வெள்ளத்தில் மூழ்கவே, மீட்புப் படையினர் உதவியோடு பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார் ரமணன்.
ramanan
புயல் நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக விடுமுறை நாட்களிலும், அலுவலகத்திற்கு வந்து வானிலை பற்றி ஊடகங்கள் வழியாக கூறி, தனது பணியில் உள்ள ஈடுபாட்டையும், மக்கள் நலனில் கொண்ட அக்கறையையும் நிரூபித்தவர் ரமணன்.

வானிலை அறிக்கை வாசிக்கும்போது, இறுக்கமா இருக்கும் ரமணனிற்கு கலகலவென்ற ஜாலியான மற்றொரு முகமும் உள்ளது. குடும்பத்தார், உடன் பழகிய நண்பர்கள், பேட்டி எடுத்த செய்தியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.

இப்படியாக மழை, வெயில் அறிவிப்புகளோடு ஒன்றிப் போன ரமணன், வரும் 31ம் தேதியோடு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று வானிலை பற்றிய தகவல்களை வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ரமணன். மீண்டும் மழை வரும். வெயில் அடிக்கும்.. புயல் வீசும்.. ஆனால் அதனை ரமணன் வாயால் கேட்க முடியாது… நினைக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் மீண்டும் ரமணன் வேறு வடிவில் வருவார். மக்களை விட்டு நீங்க மாட்டார் என்று நம்புவோம்.  அவர் பணியை பாராட்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published.