வங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா

dhoni_1457241371-horz

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான மோதலில், இறுதிகட்ட குழப்பமான சூழ்நிலையை திறம்பட சமாளித்ததாலேயே வெற்றி பெற முடிந்ததாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார்.

பரபரப்பான ஆட்டம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பரபரப்பு….டென்ஷன்…திரிலிங் என்று ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த சுவாரஸ்யமான ஆட்டமாக இது அமைந்தது என்று சொல்லலாம்.

இதில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்துடன் முதலில் பேட் செய்த இந்திய அணி 146 ரன்கள் மட்டுமே எடுக்க, அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணி, தமிம் இக்பால் (35 ரன்), சபிர் ரகுமான் (26 ரன்), ஷகிப் அல்-ஹசன் (22 ரன்) ஆகியோரின் பங்களிப்புடன் இலக்கை நோக்கி பயணித்தது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட, களத்தில் நின்ற 11 இந்தியர்களும் ஒரு வித பதற்றத்தோடு வியூகங்களுக்கு ஏற்ப தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டனர். 20-வது ஓவரை 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். முஷ்பிகுர் ரமின் இரட்டை பவுண்டரி உதவியுடன் முதல் 3 பந்துகளில் வங்காளதேசம் 9 ரன்களை எடுத்தது. எஞ்சிய 3 பந்தில் அந்த அணிக்கு 2 ரன்களே தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகளும் இருந்ததால், ‘இந்திய அணி மூட்டையை கட்ட வேண்டியது தான்’ என்று ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் வெறுப்பில் புலம்பத் தொடங்கினர். ஆனால் இந்திய கேப்டன் டோனி நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்த இரு பந்துகளில் முஷ்பிகுர் ரம், மக்முதுல்லா கேட்ச்சில் சிக்கினர்.

பலே…பலே…கேப்டன்

இதையடுத்து ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. ஒரு ரன் எடுத்தால் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு செல்லும். இப்படிப்பட்ட பதற்றமான நிலைமையில் மூத்த பவுலர் நெஹரா, அஸ்வின் உள்ளிட்ட சக வீரர்களுடன் எந்த மாதிரி பந்து வீச வைக்கலாம் என்று கேப்டன் டோனி சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

‘‘எதிரணி பேட்ஸ்மேனின் கால் பக்கத்தில் பந்து விழும் வகையில் யார்க்கராக வீச வேண்டாம்; ஒரு வேளை அது புல்டாசாகி விட்டால் வினையாகி விடும். சரியான உயரத்தில் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசுங்கள். வைடாகவும் மாறி விடக்கூடாது’ என்று ஹர்திக் பாண்ட்யாவுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்து விட்டு கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி தனது இடத்துக்கு நகர்ந்தார்.

“நான் கிளவுஸை கழட்டிட்டு ரெடியா நிக்கறேன், நீ பந்தை கொஞ்சம் வெளிய போடு அவன் அடிக்க மாட்டான் ஆனா ரன் எடுக்க முயற்சிப்பான் மத்ததை நான் பார்த்துக்கறேன்”

-கேப்டன் டோனி-

பந்தை அடிக்காவிட்டாலும் அவர்கள் ஓடி ரன் எடுக்க முயற்சிப்பார்கள். அதனால் ரன்-அவுட் ஆக்க வசதியாக டோனி வலது கை கையுறையை (குளோவ்ஸ்) கழற்றி வைத்து விட்டார். இறுதியில் டோனி சொன்னபடியே ஹர்திக் பாண்ட்யா ஆப்-சைடுக்கு வெளியே சற்று எழும்பி வரும் வகையில் பந்தை வீசினார். அதை அடிக்க தவறிய வங்காளதேச வீரர்கள் ரன் எடுக்க ஓடினர். இதற்குள் பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் டோனி 45 அடி தூரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமானை ரன்-அவுட் ஆக்கி, ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்தார். டோனியின் சாமர்த்தியமே இந்தியாவுக்கு ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது என்றால் அது மிகையாகாது. வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுத்தது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 1 ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இது 4-வது நிகழ்வாகும். இந்தியாவுக்கு இது 2-வது அனுபவமாகும்.

டோனியின் கோபம்

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி புன்னகை ததும்ப செய்தியாளர்களின் அறைக்கு வந்தார். ‘‘பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரன்-ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியம் இருந்த நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியால் திருப்தி அடைந்தீர்களா?’ என்று நிருபர் முதல் கேள்வி கணையை தொடுத்ததும், டோனி சட்டென்று கோபமடைந்தார்.

அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, ‘இன்று இந்திய அணி வெற்றி பெற்றதால் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதை நான் அறிவேன்’ என்றார். உடனே அந்த நிருபர், தான் கூற வந்ததை தெளிவுப்படுத்த முயற்சித்த போது டோனி குறுக்கிட்டு தொடர்ந்து பேசினார்.

‘நான் சொல்வதை முதலில் கேளுங்கள். உங்களது கேள்வி, அதன் தொனியை பார்க்கும் போது இந்திய அணி வெற்றி பெற்றதில் உங்களுக்கு சந்தோஷம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கிரிக்கெட் ஆட்டம் குறித்து பேசும் போது, அது எழுதி வைத்து நடப்பது அல்ல. இது கதை சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. டாஸ் தோற்ற பிறகு, இந்த ஆடுகளத்தில் எங்களால் ஏன் ரன்களை குவிக்க முடியவில்லை என்பதை நீங்கள் ஆராய வேண்டும். வெளியில் உட்கார்ந்து கொண்டு இது போன்ற விஷயங்களை ஆராயாவிட்டால், அதன் பிறகு இத்தகைய கேள்வியை நீங்கள் கேட்கக்கூடாது’ என்றார்.

குழப்பத்தில்….

டோனி மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைசி கட்ட ஆட்டத்தின் சூழ்நிலை, பெரும் குழப்பமாக இருந்தது. இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளை திறம்பட கையாள முயற்சிக்க வேண்டும். அது தான் இங்கு முக்கியமானது.

ஒவ்வொரு வீரரும் வந்து தங்களுடைய கருத்துகளை சொல்வார்கள். ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்க வேண்டியது முக்கியம். அந்த இடத்தில் பெரும்பாலும் பேட்ஸ்மேனின் கருத்து, பந்து வீச்சாளரின் கருத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகத் தான் இருக்கும். அதே சமயம் களத்தில் நிற்கும் எதிரணி பேட்ஸ்மேனின் பலம் என்ன? அவரது திறமை எப்படிப்பட்டது? ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது? அதாவது பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகுமா? இல்லையா? இப்படி எல்லா விஷயங்களையும் நாம் கணக்கிட்டு பார்க்க வேண்டியது அவசியமாகும். இவற்றை கவனித்தாலும் கூட, அணியினரின் ஆலோசனைகள் உண்மையிலேயே மிகவும் உதவிகரமாக இருந்ததாக நினைக்கிறேன்.

கடைசி பந்தை யார்க்கராக வீசுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி கடைசி பந்தை வீசினார்.

இளம் வீரர்களுக்கு பாடம்

ஹர்திக் பாண்ட்யா, பும்ரா போன்ற இளம் வீரர்களுக்கு இது நல்ல போட்டியாக அமைந்தது. நெருக்கடி என்றால் என்னவென்று அறியாதவர்கள் இந்த போட்டியின் மூலம் அதனை கற்றுக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட ஆட்டங்கள் தான் அவர்களை சிறந்த வீரர்களாக வார்த்தெடுக்கும். ஏனெனில் இத்தகைய போட்டிகள் தான் அவர்களை வித்தியாசமாக யோசிக்க கற்றுக்கொடுக்கும். இந்த வகையில் இது முக்கியமான வெற்றியாகும்.

2007-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியில், லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றதால் முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டது. அந்த தோல்வியை இன்னும் மறக்கவில்லை. தற்போதைய வெற்றி 2007-ம் ஆண்டில் நடந்த மோசமான தோல்வியால் ஏற்பட்ட வேதனையை போக்கி விடாது.

இவ்வாறு டோனி கூறினார்.

மோர்தசா அதிர்ச்சி

வங்காளதேச கேப்டன் மோர்தசா கூறுகையில், ‘வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விட்டதால், எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. யாரும் இது போன்ற தோல்வியை விரும்புவதில்லை. அதை விவரிக்கவே கடினமாக இருக்கிறது. கடைசி மூன்று பந்துகளை தவிர்த்து எங்களது ஆட்டம் அற்புதமாக இருந்தது’ என்றார்.

2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறும் போது, ‘கடைசி பந்துக்கு முன்பாக எல்லோரும் ஒன்று கூடி அதை எந்த மாதிரி வீச வேண்டும் என்று ஆலோசித்தோம். அதை பவுன்சராக வீசலாம் என்று நான் யோசனை சொன்னேன். ஏனெனில் பின்வரிசை பேட்ஸ்மேன்களால் பவுன்சரை விளாசுவது சிரமம். அது மாதிரியே வங்காளதேச பேட்ஸ்மேன் அந்த பந்தை அடிக்க தவறினார். நாங்கள் வெற்றி கண்டோம். கடைசி ஓவரின் போது எனது இதயதுடிப்பு நிமிடத்திற்கு 145 முறை துடிப்பது போன்று உணர்ந்தேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.