வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி ஒரு ரன் வித்தியாசம்

shikhar-dhawan-r-of-india-celebrates-as-he-reaches-501

கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தியா பங்களாதேஷ் போட்டியில் ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது இந்தியா. ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதின. கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தால் பங்களாதேஷுக்கு வெற்றி என்ற நிலை ஏற்பட, பாண்ட்யாவின் துல்லியமான பந்துவீச்சால் ‘த்ரில்’ வெற்றி கண்ட இந்தியா, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 ஆவது தோல்வியை சந்தித்த பங்களாதேஷ் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 42 ஓட்டங்கள் சேர்த்தது.

ரோஹித் சர்மா 16 பந்துகளில் ஒர சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் 18 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவன் 22 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. வழக்கமாக அதிரடியாக ஆடும் விராட் கோலி, இந்த முறை சற்று தடுமாறினார். இதனால் முதல் 10 ஓவர்களில் 59 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. 11-ஆவது ஓவரில் ரெய்னா இரு சிக்ஸர்களை விளாச, ஆட்டம் சூடுபிடித்தது. இந்தியா 95 ஓட்டங்களை எட்டியபோது விராட் கோலி ஆட்டமிழந்தார்.

ஷுவகதா ஹோம் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு, ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 24 பந்துகளில் 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். கோலி-ரெய்னா ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து வந்த பாண்ட்யா சிக்ஸர் அடித்து ஓட்டக் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், அல்ஹசன் ஓவரில் இரு பவுண்டரிகளை விளாச, 15 ஓவர்களில் 112 ஓட்டங்களை எட்டியது இந்தியா.

16 ஆவது ஓவரை வீசிய அல்-அமீன், முதல் இரு பந்துகளில் முறையே ரெய்னா மற்றும் பாண்டியாவை வீழ்த்தினார். ரெய்னா 23 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பெளண்டரியுடன் 30, பாண்ட்யா 7 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பெளண்டரிகளுடன் 15 ஓட்டங்கள் எடுத்தனர். இதையடுத்து கப்டன் டோனியுடன் இணைந்தார் யுவராஜ் சிங். இந்த ஜோடி நிலைக்கவில்லை. யுவராஜ் சிங் 6 பந்துகளில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். இதையடுத்து வந்த ஜடேஜா 8 பந்துகளில் 12 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, அஸ்வின் களம்புகுந்தார். இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது.

டோனி 13, அஸ்வின் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 34 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. பங்களாதேஷ் தரப்பில் அல்-அமீன் ஹுசைன், முஸ்தாபிஜுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணியில் முகமது மிதுன் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் 32 பந்துகளில் 35 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். இதன்பிறகு சபீர் ரஹ்மான்-அல்ஹசன் ஜோடி சிறப்பாக ஆட, பங்களாதேஷின் கை ஓங்கியது.

சபீர் ரஹ்மான் 15 பந்துகளில் 26 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த மோர்ட்டஸா 6 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து அல்ஹசன் 22 ஓட்டங்களில் (15 பந்துகளில்) ஆட்டமிழக்க, பங்களாதேஷுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த செளம்ய சர்க்கார்-மகமதுல்லா ஜோடி வேகம் காட்ட, பங்களாதேஷ் வெற்றியை நெருங்கியது. கடைசி 3 ஓவர்களில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, 18-ஆவது ஓவரை வீசிய நெஹ்ரா, சர்க்காரை (21 ஓட்டங்களில்) வீழ்த்தியபோதும், 10 ஓட்டங்களை வழங்கினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 19-ஆவது ஓவரை வீசிய பூம்ரா 6 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட, பாண்ட்யாவை பந்துவீச அழைத்தார் டோனி.

முதல் 3 பந்துகளில் 9 ஓட்டங்களைக் கொடுத்தார் பாண்ட்யா. இதனால் இந்தியாவின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தபோது, 4 மற்றும் 5-ஆவது பந்துகளில் முஷ்பிகுர் ரஹிம் (11), மகமதுல்லா (18) ஆகியோரை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார் பாண்ட்யா. இதனால் கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசிப் பந்தை ஷுவகதா ஹோமால் தொட முடியவில்லை.

அதேநேரத்தில் எதிர்முனையில் இருந்து முஸ்தாபிஜுர் ரஹ்மான் ஓட்டம் எடுக்க ஓடி வர, அவரை டோனி ரன் அவுட்டாக்கினார். இதனால் இந்தியா ஒரு ஓடத்தால் த்ரில் வெற்றி பெற்றது. 4 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்த அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பரபரப்பான இந்தியாவின் வெற்றி திரில் வெற்றி தான்……..பங்களாதேஷ் வெளியேறியது…

Leave a Reply

Your email address will not be published.