விஜய் மல்லையாவை பிடிக்க துப்பில்லை என்னிடம் ஃபைன் கேட்கின்றாயா? தரமாட்டேன் – ரயில் நிலையத்தில் பெண் கரார்

Weight

மும்பையில் உள்ள மகாலட்சுமி ரெயில்நிலையத்தில் நேற்று முன்தினம் பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தீவிரமாக தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் பிரேமலதா (வயது 44) என்ற பெண் வந்தார்.

அவரை மறித்து டிக்கெட் பரிசோதகர் பயணம் செய்ததற்கான டிக்கெட்டை கேட்டார். ஆனால் அவரிடம் டிக்கெட் இல்லை. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவிடம் டிக்கெட் இன்றி பயணம் செய்ததற்காக ரூ.260 அபராதமாக செலுத்தும்படி கூறினார். ஆனால் பிரேமலதா ரூ. 9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையாவை பிடியுங்கள் பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன் என்றார். பிரேமலதா விளையாட்டிற்காக அப்படி சொல்வதாக நினைத்து டிக்கெட் பரிசோதகர் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தநிலையில் நேரம் சென்று கொண்டே இருந்தது. 15 நிமிடம், 30 நிமிடம் ஆனது. 30 நிமிடம் ஒரு மணி நேரம் ஆனது. ஆனால் பிரேமலதா தான் கூறியதையே கூறினார். இதனால் பொறுமையிழந்த அந்த பெண் டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவை ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்றார்.

அங்கு ரெயில்வே அதிகாரிகள் எடுத்துக்கூறியும் அந்த பெண் அபராதம் செலுத்துவதாக இல்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு பெண் ரெயில்வே போலீஸ் மற்றும் அக்ரிபாடா போலீசார் பிரேமலதாவிடம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுரை கூறினர். இல்லாவிடில் ஜெயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும் என மிரட்டியும் பார்த்தனர்.

ஆனால் பிரேமலதா மசிவதாக இல்லை. வேறு வழியில்லாமல் ரெயில்வே போலீசார் அவரிடம் கெஞ்சியும் பார்த்தனர். ஆனால் அவர் சொன்னதையே திரும்பச் சொன்னார். இதையடுத்து ரெயில்வே போலீசார் கடைசியாக பிரேமலதாவின் கணவருக்கு போன் செய்து நடந்ததை கூறினர். ஆனால் பிரேமலதாவோ இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என கணவரிடம் ஒரே போடாகப் போட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து எப்படி அபராதத்தை வசூலிப்பது என போலீசார் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

ரூ.260 அபராதம் செலுத்தாமல் சுமார் 12 மணி நேரம் போராடிய பிரேமலதாவை நீங்கள் ஏதோ பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை வீட்டில் இருந்து வந்தவர் என்று நினைத்துவிட வேண்டாம். தென்மும்பை, பூலேஷ்வர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரேமலதாவின் வீடு மட்டும் ரூ. 5 முதல் ரூ.7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இவரது கணவர் தொழில் அதிபர் ஆவார். இவ்வாறு நடந்து கொண்டது குறித்து பிரேமலதாவிடம் கேட்டபோது, “ எனக்கு தெரிந்த வகையில் நான் ஏழைகளுக்காக போராடுகிறேன். ஒருவேளை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால் என்னிடம் அவர்கள் (ரெயில்வே அதிகாரிகள், போலீசார்) எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நீதிபதியிடம் கூறுவேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.