ஓட்டுப் போட்டா ஒரு லட்சம் பரிசு – தேர்தல் ஆணையம்

download (15)

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறார்கள். 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஆலோசித்து அதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.

இதில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர், மாவட்ட வாக்காளர்களுக்கு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்தல் நாளன்று பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தேர்தல் கமிஷன் சார்பில் வாழ்த்து அட்டை ஒன்று தரப்படும். அந்த அட்டையில் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தேர்தல் முடிந்த பின்பு அந்த அட்டைகளின் அடிப்பகுதி அனைத்தும் சேகரிக்கப்பட்டு குலுக்கல் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு தேர்தல் கமிஷன் சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது தவிர பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ‘ஓட்டு போடு, வெற்றி பெறு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் கமிஷன் சார்பில் கடிதங்களும் அனுப்பப்பட்டு வருகிறது.

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை இன்னமும் நடைமுறையில் உள்ளது. அங்குள்ள மக்கள் இப்போதும், லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். அவர்களின் ஆர்வத்தை காரணம் காட்டி நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் கமிஷனும் வாக்களிப்பவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் நடத்த இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலின்போது 68.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதன் பிறகு 2014–ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 65.67 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தன. இப்போது வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் கமிஷன் எடுத்துள்ள புதிய முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published.