விருதுநகரில் சமோசாவில் பல்லி – கடைக்கு சீல் வைப்பு

201603190034107005_Tea-is-sold-in-the-store-camocavukkul-lizard_SECVPF

விருதுநகர் டீக்கடையில் துப்புரவு பணியாளர் வாங்கிய சமோசாவுக்குள் பல்லி கிடந்தது. அவர் அதை சாப்பிடுவதற்குள் பார்த்து விட்டதால் உடல்நலத்திற்கு கேடு விளையாமல் தப்பினார்.

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் ஜெயக்கனி (வயது 52). இவர் நேற்று காலை விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ அருந்தினார். அப்போது அங்கு சமோசா இருந்ததை கண்டு அதில் ஒன்றை வாங்கி சாப்பிடத் தொடங்கினார். சமோசாவை பிய்த்ததுமே, அதற்குள் ஒரு சிறிய பல்லி இறந்த நிலையில் இருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வாய்க்குள் இருந்த சமோசா துண்டுகளைத் துப்பி விட்ட அவர் இதுபற்றி நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் குருசாமிக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் அந்த டீக்கடைக்கு விரைந்து வந்து பல்லி கிடந்த சமோசாவை பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த டீக்கடையில் இருந்த மற்ற சமோசாக்கள், அருகில் இருந்த டீக்கடைகளில் வைத்திருந்த சமோசாக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சமோசாக்களை சப்ளை செய்தது யார் என்று விசாரித்தபோது, விருதுநகரில் உள்ள 2 தயாரிப்புக்கூடங்களில் இருந்து அவை பெறப்பட்டது தெரியவந்தது. டீக்கடைக்காரர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சாஸ்திரி நகரில் செய்யது, சீதக்காதி தெருவில் அப்துல் ஆகியோர் நடத்தி வந்த சமோசா தயாரிப்புக்கூடங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கிருந்த சமையல் எண்ணெய், சமோசா தயாரிக்க பயன்படுத்திய மாவு, உணவுப்பொருட்கள் ஆகியவை அனைத்தும் அழிக்கப்பட்டன. பிறகு அந்த சமோசா தயாரிப்புக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இனி உரிய அனுமதி பெற்ற பின்னர் தான் சமோசா தயாரிப்பை தொடங்க வேண்டும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.