திருடி திருடியே சொகுசு பங்களா கட்டிய பெருங்கொள்ளைக்காரி

ellamma-150x150

கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தில் அவர் பண்ணை வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலமரத்து அருகே உள்ள மதுரா கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மா. இவர் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. சென்னையில் தேனாம்பேட்டை, மாம்பலம், அசோக்நகர், வடபழனி, வளசரவாக்கம், சாஸ்திரி நகர், குமரன் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ளார். ஆனால், காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டு ஜாமீனில் வெளிவருவது இவரது வழக்கம்.
இந்த எல்லம்மா, தனது உண்மையான வீட்டு முகவரியை கொடுக்காமல், பொய்யான முகவரியை கொடுத்து தப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வடபழனி முருகன் கோவிலில் வயதான பெண்களின் கவனத்தை திசைதிருப்பி, நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இவர் நகைகளை பறிக்கும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டனர்.

இதைத் தொடர்ந்து, இவரை கைது செய்ய காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் எல்லம்மா இதுவரை போலியான முகவரிகளை கொடுத்து தப்பித்து வந்தது தெரியவந்ததால், இவரது உண்மையான முகவரியை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.

தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இவரது உண்மையான முகவரியை கண்டுபிடித்தனர். எல்லம்மா வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மதுரா கிராமத்தில் பண்ணை வீடு கட்டி, அந்த வீட்டில் சொகுசாக வாழ்ந்து வருவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனிப்படை காவல்துறையினர் அதிகாலையில் பண்ணை வீட்டில் புகுந்து, எல்லம்மாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

கொள்ளைத் தொழிலில் எனக்கு ஆசானாக விளங்கியவர் எனது கணவர் ராஜேஷ் தான். அவர்தான் எனக்கு இந்த கொள்ளை தொழிலை கற்றுத்தந்தார். வயதான மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களது கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலிகளை பறிப்பது பற்றி நாங்கள் பயிற்சி எடுத்துள்ளோம்.

எனது கணவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி ரத்தினம்மா. நான் முறைப்பெண் என்பதால் எனக்கு கொள்ளைத்தொழிலை கற்றுக்கொடுத்து, எனது கணவர் இரண்டாவதாக என்னை மணந்து கொண்டார். மூன்றாவதாக மாதுரி என்ற பெண்ணையும் எனது கணவர் மணந்தார். நாங்கள் 3 பேரும் தமிழகம் முழுவதும் கோவில் திருவிழா நடக்கும் இடங்களுக்கு செல்வோம். திருவிழாக்களுக்கு வரும் பெண்களை ஏமாற்றி நகைகளை பறிப்போம்.

ஒரு இடத்திற்கு கொள்ளையடிக்க சென்றால் குறைந்தது 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு நாங்கள் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்களை கணவர் அடித்து உதைப்பார். மாதுரி தற்போது இறந்து விட்டார். ரத்தினம்மாவும், நானும்தான் கொள்ளைத் தொழிலை செய்துவந்தோம். எனது கணவருக்கு இருதய நோய் என்பதால் அவர் இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

எங்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதன் மூலம் 7 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது கணவர் தொழிலை விட்டு ஒதுங்கிவிட்டதால், மகன் சுரேஷை கொள்ளைத் தொழிலில் இறக்கியுள்ளோம்.

நாங்கள் கொள்ளைத்தொழிலை மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் செய்துவருகிறோம். காவல்துறையினர் எங்களை பிடித்தாலும் சாதாரண ஜேப்படி வழக்குகளை பதிவுசெய்து எளிதில் எங்களை ஜாமீனில் விட்டு விடுவார்கள். எங்களை ஜாமீனில் எடுக்க தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆட்கள் உள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகளும் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

நான் எனது 17 வயதில் கொள்ளைத் தொழிலை தொடங்கிவிட்டேன். தற்போதுதான் முதல்முறையாக எனது உண்மையான வீட்டு முகவரியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு எல்லம்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார். ரத்தினம்மாவும், சுரேசும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கைது செய்யவும் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் 7 ஏக்கர் நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு கட்டியுள்ளனர்.

பழத்தோட்டம், பூந்தோட்டம், அமைக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்தோடு அந்த வீடு காட்சியளிக்கிறது. அந்த வீட்டின் ஆவணங்களை கைப்பற்றி, அதை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.