ஓட்டுப் போட பணம் வாங்கினால் ஒரு வருடம் ஜெயில்

images

தமிழகத்தில் தேர்தல் விழா ஆரம்பித்துவிட்டது…. இது இனிமேல் தமிழகமெங்கும் பிரச்சாரங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் ஆகியவை நடக்க ஆரம்பிக்கும்.   இப்போது தமிழகத்தில் தேர்தலில் ஒரு கட்சிக்காக ஓட்டுப்போட பணம் தருவார்கள்… அப்போது நாம் பணம் வாங்கியது தெரிந்தால் உடனடியாக காவலர்கள் கைது செய்து 1 வருட சிறை தண்டனை கொடுத்துவிடுவார்கள்.

சட்டசபை தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. எனவே தேர்தல் தொடர்பான எல்லா நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதையும், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுப்பதும் தங்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம்ஜைதி கூறியிருந்தார்.

அவரது அறிவுறுத்தலின் பேரில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு முழுவதும் 300–க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தீவிர வாகன சோதனை காரணமாக இதுவரை சுமார் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பறக்கும் படையினரின் அதிரடி சோதனை காரணமாக பணம் பெரிய அளவில் எடுத்து செல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் தேர்தல் நெருங்கும்போது மாற்று வழிகளில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதில் ஈடுபட கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து பண பட்டு வாடாவை தடுக்க மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. அதன்படி ‘‘வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை தண்டனை அளிக்கப்படும்’’ என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட உள்ளது. வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று வீடு தோறும் பிரசாரம் செய்யப்படும். பணம் மட்டுமின்றி பரிசு பொருட்கள் மற்றும் மதுபான வகைகளை வாக்களிப்பதற்காக பெற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘‘வாக்களிக்க பணம் வாங்கினால் சிறையில் அடைக்கப்படுவார்கள்’’ என்ற எச்சரிக்கையை ஒவ்வொரு வாக்காளரிடமும் தெரிவிக்க தனிக்குழுவை தேர்தல் கமிஷன் அமைத்து வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் இந்த குழு செயல்படும்.

இந்த குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள். வாக்காளர்கள் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டால் இந்த தனிக்குழுவினர் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பார்கள். அதன் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்று வாக்களிக்க பணம் வாங்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்த திட்டத்தின் மூலம் பண பட்டுவாடா நடப்பதை ஓரளவு தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.