திடீர் நாற்றத்தால் கூடங்குளம் மக்கள் பீதி

download

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் அளவில் துர்நாற்றம் அடித்துவருவதாக அந்த பகுதி மக்கள் பீதியடைந்து புகார்களை முன்னெடுத்துவைக்கின்றனர்.

கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இடிந்தகரை ஊர்நலக்கமிட்டி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:

கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 8 ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் ஒருவித துர்நாற்றம் வீசி வருகிறது. கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி, கூத்தன்குழி உள்பட மொத்தம் 10 கி.மீ. சுற்றளவுக்கு இந்த துர்நாற்றம் நிலவுகிறது. இதனால் தேவாலயங்களில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்து உள்ளோம். உயிருக்கு அஞ்சும் நிலையில் வசித்து வருகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து இந்த துர்நாற்றம் வெளியேறியிருக்கலாம் என அஞ்சுகிறோம். ஆகவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து துர்நாற்றத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடிந்தகரை பகுதியில் கடந்த 8ஆம் தேதி இரவு திடீரென மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சிலருக்கு வாந்தி, மயக்கமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த துர்நாற்றம் எங்கிருந்து வந்தது என ஆய்வு செய்தபோது அது அணு உலை பகுதியில் இருந்துதான் வந்துள்ளது.

இடிந்தகரையிலிருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள இருக்கன்துறையில் செயல்பட்டு வருகின்ற மீன் அரவை ஆலையில் இருந்து இந்த துர்நாற்றம் வந்ததாக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இருக்கன்துறை மீன் அரவை ஆலைக்கும் இடிந்தகரைக்கும் இடையில் நக்கனேரி, சங்கனேரி, கூடங்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஆனால் இந்த கிராமங்களில் துர்நாற்றம் வீசவில்லை. கூடங்குளம் அணுஉலையில் இருந்து இடிந்தகரை, விஜயாபதி பகுதியை நோக்கிதான் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே இடிந்தகரை பகுதியில் வீசிய துர்நாற்றம் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.