பழம் கனிந்து பாலில் விழப்போகின்றதோ? திமுக-தேமுதிக கூட்டணி

ztvqg_213707

எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது.  இதனால் பல விதமான கூட்டணி முடிவுகளை அக்கட்சி தலைமையிடம் எடுத்துவருகின்றது.  இந்த நிலையில் தேமுதிக கூட்டணி – நிலவரம்  சரியாகவும் தெரிவதாக இல்லை.  பாஜகவா திமுக வா என்று தெரியவில்லை.  இந்நிலையில் கலைஞர் ” பழம் கனிந்து கொண்டிருக்கின்றது கண்டிப்பாக பாலில் விழுந்து விடும் ” என்று கருத்தை தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஒட்டி திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனவும், வருகின்ற 11 ஆம் தேதியன்று கருணாநிதி,விஜயகாந்த் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. தில்லியில் இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு கூட்டணியை உறுதி செய்து சென்றார்.  இந்நிலையில், கூட்டணி தொடர்பாக கடந்த 6 மாதங்களாகவே தேமுதிகவிடம் திமுக பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், விஜயகாந்த் குடும்பத்தினருடன் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வந்தனர்.

 தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷை சந்தித்து முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் முன்னேற்றம் ஏற்படவே அடுத்து பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது கூட்டணிக்கு வர பல நிபந்தனைகளை பிரேமலதா விதித்ததாக தெரிகிறது. முதலில் 70 தொகுதியும் ஆட்சியில் பங்கும் வேண்டும் என்ற விஜயகாந்தின் நிபந்தனை தான் கூட்டணிக்கு தடையாக இருந்தது. எனினும்  ஒரு சில நிபந்தனைகளை தவிர, எல்லா நிபந்தனைகளையும் தி.மு.க. தரப்பு ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் தேமுதிக திடீரென மறுப்பு அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து  தேமுதிக தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறும் போது திமுக கூட்டணியை நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால், பிரேமலதாவுக்கு அதில் விருப்பமில்லை. அவரது நடவடிக்கைகள் பாஜக கூட்டணியை விரும்புவது போலவே உள்ளன. தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் காலை விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர்களிடம், ‘‘கட்சி தொடங்கிய ஓராண்டில் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்றபோது 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2009 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றபோது 10.3 சதவீதமாக வாக்கு வங்கி உயர்ந்தது. ஆனால், அதிமுக கூட்டணிக்கு சென்றபோது 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில்தான் வென்றோம். கடந்த மக்களவைத் தேர்தலில் 5.9 சதவீதமாக வாக்கு வங்கி குறைந்தது.

கூட்டணி அமைத்த பிறகு நாம் சரிவைத்தான் சந்தித்துள்ளோம். கூட்டணி மூலம் நாம் வளர வேண்டுமே தவிர, சரிவை நோக்கி செல்லக் கூடாது. கூட்டணி என்று அமைத்தால், அமைகிற அரசில் நாம் அங்கமாக இருக்க வேண்டும். அப்படியொரு சூழல் இப்போது ஏற்படவில்லை. தேர்தலுக்கு 2 மாதத்துக்கும்மேல் அவகாசம் உள்ளது. எனவே, சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுப்பேன்’ என்று கூறினார்.

ஆனால் தற்போது தி.மு.க. கூட்டணிக்கு வர தே.மு.தி.க தரப்பில் இருந்து பச்சை கொடி காட்டியிருப்பதாக தெரிகிறது.  இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேட்டியளித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி முடிவாவதில் இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை” என்று கூறினார். இந்த மறைமுகமான பதிலால் தி.மு.க உடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக11 ஆம் தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என தெரிகிறது.

அன்றைய தினம் தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும், தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்க தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் 25 சதவீதம் இடம் வழங்கப்படுகிறது. ராஜ்யசபாவில் ஒரு இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கையையும் தே.மு.தி.க வைத்துள்ளது. ஆனால், இதுவரை அதுகுறித்து மட்டும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.