நளினி உட்பட 7 பேரும் – விடுதலையா?

maatram.today_.06.08.00

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கும் வேலூர் சிறை நிர்வாகம் நன்னடத்தை சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.

மேலும், நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் இருந்து, ”நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பான ஃபார்மாலிட்டி (சம்பிரதாய) நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்” என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நளினி, முருகன் உள்ளிட்டவர்களின் சிறை நடத்தைகள் மிகவும் நன்றாக உள்ளது என்று தமிழக அரசுக்கு வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று கொடுத்து கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால், 7 பேர் விடுதலை தொடர்பாக நேற்று வெளியான தகவல்படி எதுவும் நடக்கவில்லை.

இவர்களின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கும் மத்திய அரசு தற்போது, ‘இதை நாங்கள் பரிசீலிப்போம்’ என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், இந்த 7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-வது  பிரிவின் கீழ் விடுதலை செய்ய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால், 161-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அதற்கான உதாரணம்தான் இந்த சிறைத்துறையின் நன்னடத்தை சான்று நடவடிக்கை என்று கூறப்படுகிறது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது, அரசமைப்புச் சட்டம் 161- ஐ பயன்படுத்தி விடுதலை செய்யும் நடவடிக்கையை எந்தவகையிலும் பாதிக்காது.

ஏனென்றால் நளினி, பேரறிவாளன் ஆகியோர் ஒரு மாதம் பரோல் கேட்டபோது, இதே சிறை நிர்வாகம் அவர்களுக்கு நன்னடத்தை சான்று வழங்கவில்லை. ஆனால் தற்போது வழங்கி தமிழக அரசிடம் அதை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், 25 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைகளுக்கு இன்னும் சில தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.