தேர்தல் நாள் அறிவித்தல் எதிரொலி – அம்மா உணவகத்தில் ஜெ முகம் மறைப்பு

download (9)
தமிழக சட்டமன்ற தேர்தல் மே.16-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.
பெருநகர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற தொடங்கி உள்ளது. அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள் அருகில் உள்ள தலைவர்கள் சிலைகளை மறைக்கும் பணியும் நடைபெற தொடங்கியது.
சென்னையில் உள்ள ‘அம்மா’ உணவகங்களின் பெயர் பலகையில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்தை மறைக்கும் பணியிலும், அரசியல் கட்சியினர் சாலையில் ஆங்காங்கே வைத்துள்ள பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக ஈடுபட தொடங்கினர்.
அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் இந்த பணிகள் அனைத்தும் முழுமையடையும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் ஒரு தொகுதிக்கு ஒரு சோதனை மையம் என்ற அடிப்படையில் 16 தொகுதிகளுக்கு சோதனை மையங்கள் அமையும் இடங்களின் பட்டியல் தயாரிக்கும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.