கவரிங் நகைக்காக கழுத்தை அறுத்த கொள்ளையர்கள் – கம்மல் வராததால் காதை அறுத்த கொடூரம்

Daily_News_8069530725480

எழும்பூர் குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டி நகை, பணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கம்மல் வராததால் கொள்ளையர்கள் காதை அறுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-ஆப்டெக்ஸ் அருகில் பாந்தியன் லேன் உள்ளது. இங்கு மெயின் ரோட்டை ஒட்டி ‘ராம் மேன்சன்’ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

9 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 61 வீடுகள் உள்ளன. கலர் லேப், டெய்லர் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களும் கீழ் தளத்தில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 3வது மாடியில் கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த சாரதா (72) என்பவர் வசித்து வந்தார்.
இவரது தம்பி திவாகர் துபாயில் உள்ள மஸ்கட்டில் வேலை செய்து வருகிறார். திவாகரின் மகள் தான்யா (20). சாரதாவுடன் தங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் தான்யா, வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். மதியம் சாப்பிடுவதற்கு வந்து சென்றுள்ளார். இதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் தான்யா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது, சாரதா ரத்த வெள்ளத்தில் தரையில் சடலமாக கிடந்ததார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இடது காது துண்டிக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் வலது காதில் இருந்த கம்மலும் மாயமாகி இருந்தது. இதைப் பார்த்து தான்யா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

04-1457109801-murderwoman

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கலிதீர்த்தான், எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சடலமாக கிடந்த சாரதா உடலை மோப்பம் பிடித்து விட்டு மின்னல் வேகத்தில் வெளியே பாய்ந்தது. கோ-ஆப்டெக்ஸ் வரை ஓடி வந்த மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொலையாளிகளின் ரேகைகளை பதிவு செய்தனர்.

பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை யில், வீட்டில் மூதாட்டி தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரை கொலை செய்தது, நகை, பணத்தை கொள்ளையடித்து சென் றது தெரிந்தது. கொலையாளிகளை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வடமாநில வாலிபர்கள் கைவரிசையா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழ்ப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் செல்போனுக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை வட மாநில வாலிபர் ஒருவர் செய்திருந்தார். தற்போது, சாரதா தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். எனவே, இவர்களில் யாரேனும் நகை, பணத்திற்காக கொலை செய்திருப்பார்களா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்

கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இதுபோன்ற ஒரு இடத்தில் நடந்துள்ள இத்துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்து சென்று லிப்டில் ஏறும் பகுதியில் ஒரு கேமராவும், பின்புறத்தில் இன்னொரு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் லிப்ட் பகுதியில் இருக்கும் கேமரா செயல்படாமல் உள்ளது.

பின்புறத்தில் இருக்கும் கேமரா மட்டும் இயங்கி உள்ளது. அதிலும் குற்றவாளிகள் உருவம் பதிவாகவில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு தாமஸ் என்ற காவலாளி பணியில் இருந்தார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களிலும் சந்தேகப்படும்படி யாரும் பதிவாகவில்லை. இதனால் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கில் நீடித்து வருகிறது.

கவரிங் நகை பறிப்பு

கொலையாளி ஒருவனாக வந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் சாரதா கழுத்தை கொலையாளி அறுத்துள்ளான். வழக்கமாக தெரியாத யாரையும் சாரதா வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லையாம். எனவே, நன்கு தெரிந்த அல்லது பழக்கப்பட்ட நபரே கொலையாளி என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கழுத்தில் கிடந்த செயினையும் பறித்து சென்றுள்ளனர். ஆனால், அந்த நகை கவரிங் என தெரியவந்துள்ளது.

காற்றில் பறக்கும் கமிஷனர் உத்தரவு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்த மூதாட்டி எம்மா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தற்போதும் மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை ரோந்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தற்போது அந்த உத்தரவு காற்றில் பறந்து வருகிறது.

ஓட்டல் ஊழியர்கள் மீது சந்தேகம்

கொலை செய்யப்பட்ட சாரதா, தான்யாவுடன் பீட்சா, பர்கர், பிரைடு சிக்கன் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுவது வழக்கம். மினரல் வாட்டர் கேன்களையும் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி உள்ளனர். பிரபலமான சிக்கன் கடையில் இருந்து துரித உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால், இக்கடையில் பணிபுரியும் ஊழியர்களில் எவரேனும் ஒருவர் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1. கொலை செய்யப்பட்ட சாரதாவும், கல்லூரி மாணவியான தான்யாவும் தங்கி இருந்த வீட்டில் மது பாட்டிகல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது போலீசுக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் வெளியில் இருந்து யாராவது சாரதா வீட்டிற்கு வந்து அடிக்கடி மது அருந்தி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி தான்யாவிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

2.கொலையாளிகள் வெளியில் இருந்து கத்தியை எடுத்து வரவில்லை. மாறாக சமையல் அறையில் இருந்த கத்தியைத்தான் எடுத்து கொலை செய்துள்ளனர். எனவே, கொலையாளி வெளியே இருந்து வரவில்லை. தெரிந்த நபர்தான் கொலை செய்துள்ளனர். மேலும், வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்து விட்டு கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நகர்கிறது.

Leave a Reply

Your email address will not be published.