ராஜிவ் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

Rajiv_killer_relea_1761721g

”அரசியல் விளையாட்டுக்கு, நளினி, முருகன் உட்பட, ஏழு பேரும் பலியாகி விடக்கூடாது,” என, நளியின் சகோதரர் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியின் சகோதரர் பாக்கியநாதன், தாய் நர்சு பத்மா ஆகியோர், நேற்று காலை, 11 மணிக்கு, சிறைக்குச் சென்று நளினியை சந்தித்து பேசினர்.

பின்னர் வெளியே வந்த பாக்கியநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ் கொலை வழக்கு கைதிகளான, முருகன் உட்பட, ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்தாண்டும் இதே போல், ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலையாகவில்லை.

இதில், ஏழு பேரையும் விடுதலை செய்வதை, அரசியலாக பார்க்க வேண்டாம். நளினி, 25 ஆண்டுகளாக மகளை பிரிந்து, சிறையில் இருக்கிறார். இதை காங்., கட்சியினரும், ஏழு பேரின் விடுதலையை எதிர்ப்பவர்களும் மனித நேயத்துடன் பார்க்க வேண்டும்.

அரசியல் விளையாட்டுக்கு, ஏழு பேரும் பலியாகி விடக்கூடாது. ஆயுள் தண்டனை என்பது, 14 ஆண்டுகள் தான். ஆனால், ஏழு பேரும் இரட்டிப்பு ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டனர். மத்திய அரசு மனித நேயத்துடன், ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகனை, திரைப்பட இயக்குனர் கவுதமன் நேற்று சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.