இந்தியா பாக் – எல்லையில் சுரங்கப்பாதை – தீவிரவாதிகளின் செயல்

infiltration

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தானின் கைவரிசையாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று காலை 10 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஓரிடத்தில், புதர்களை அகற்றியபோது, அங்கு சுரங்கப்பாதையின் ஒரு முனை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அந்த சுரங்கப்பாதையின் மறுமுனை, பாகிஸ்தானில் இருந்து தொடங்குவதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்திய பகுதியில் வெளியேறும் பகுதி இன்னும் முழுமையாக வெட்டப்படாமல் இருந்தது. ஜே.சி.பி. உதவியால், சுரங்கப்பாதையை வெட்டி இருப்பதும் தெரிய வந்தது. ஒரு ஆள், எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை ஆங்கில ‘எல்‘ வடிவத்தில் உள்ளது. 30 மீட்டர் நீளமும், 12 அடி ஆழமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. தீவிரவாதிகளை ரகசியமாக இந்தியாவுக்குள் அனுப்பி வைப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு எல்லை படையினரும் இணைந்து இந்த வேலையைச் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சுரங்கப்பாதை பற்றிய தகவல் அறிந்தவுடன், எல்லை பாதுகாப்பு படையின் ஜம்மு சரக ஐ.ஜி. ராகேஷ் சர்மா, அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கொடி சந்திப்புக்கு பாகிஸ்தான் எல்லை படையினரை அழைத்தபோது, அவர்கள் வர மறுத்து விட்டதாகவும் ராகேஷ் சர்மா கூறினார். சம்பந்தப்பட்ட இடம், சர்ச்சைக்குரிய இடம் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு, சர்வதேச எல்லையில் சம்பா மாவட்டத்தில் 400 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மே மாதம், சம்பா மாவட்டத்தில் 23 மீட்டர் நீள சுரங்கப்பாதையும், அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், பல்லன்வாலா பகுதியில், 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையும் கண்டுபிடிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.