அப்துல் கலாமின் பெயரால் புதிய கட்சி துவக்கம் – குடும்பத்தினர் அதிருப்தி

images (1)

தமிழ்நாட்டில் மூலைக்கொரு கட்சி தொடங்கிக் கொண்டு இருக்க இப்போது அப்துல் கலாமையும் விட்டு வைக்காமல் அவருக்கும் ஒரு கொடியை கண்டுபித்து அந்த கட்சிக்கு அப்துல் கலாமின் பெயரையும் வைத்து ஆரம்பித்துவிட்டார்கள்.

ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது ஆலோசகர் பொன்ராஜ் அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி தொடங்கி உள்ளார். விஷன் இந்தியா பார்ட்டி என்ற அரசியல் புதிய கட்சி பெயர் பலகையையும் பொன்ராஜ் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பச்சை, வெள்ளை, நீலம் ஆகிய நிறம் கொண்ட அப்துல்கலாம் உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து கொடி ஏற்றிவைத்த பொன்ராஜ், ஊழலற்ற ஆட்சி அமையவும், அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற இக்கட்சி பாடுபடும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டதற்கு அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். கலாமின் சகோதர் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் கூறுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கலாம். அவரது பெயரில் கட்சி தொடங்கி இருப்பது சங்கடமாக உள்ளது என்றார்.

அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம் கூறியதாவது:–

பொன்ராஜ் கட்சி ஆரம்பிப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் அப்துல்கலாம் குடும்பம் எதுவும் தலையிடவில்லை. ஆனால் அப்துல்கலாமின் பெயர், உருவபடத்தை வைத்து புதிய அரசியல் கட்சி தொடங்கி இருப்பதில் எனது தாத்தாவும், அப்துல்கலாமின் மூத்த சகோதரருமான முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயருக்கு முழுமையாக உடன்பாடில்லை.

அப்துல் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் எப்போதும் அரசியலை விரும்பியது இல்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதில் உடன்பாடில்லை. அப்துல் கலாம் சகோதரரை சந்திக்க பொன்ராஜ் வந்த போது அவர் ஓய்வு எடுப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என தெரிவித்துவிட்டோம். அப்துல் கலாம் பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி இருப்பதற்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.