நாட்டை அரசாள யாருக்கு தகுதியுள்ளது – ஜெ – குட்டிக்கதை

jayalalithaa-election-campaign_650x400_61435040884

ஆர்.கே. நகர் – சென்னையில் நடந்த நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பேசுகையில் நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கின்றது என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் சுவையாக விளக்கினார். நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.

ஒரு ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆள, தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார். அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர்.

அந்த இருவரிடமும் ஒரே அளவான தங்க கட்டிகளை கொடுத்து, “இதை நீங்கள் செம்மையாக பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை 3 மாதங்களுக்கு பிறகு அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறினார் அரசர்.

மூன்று மாதங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர். முதல் நபரை பார்த்து தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்று அரசன் வினவினார். தனது மகனையும், மகளையும் அவையின் முன் நிறுத்திய அந்த நபர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த நகைகளை மகள் அணிந்து கொண்டிருப்பதையும், அழகிய தங்கப்பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும் அரசனுக்கு காட்டினான்.

அவற்றை கண்டு வியந்த அவையினர் அரசர் கொடுத்த தங்கக்கட்டிகளை, இவர் நன்றாக பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டினை நன்றாக ஆள்வார் எனக்கூறினர். “உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும் தானா?” என அரசன் வினவினார். அதற்கு அந்த நபர் “இல்லை. இல்லை. எனது மற்ற பிள்ளைகளை எல்லாம் நான் தலை முழுகி விட்டேன்” என்று கூறினான்.

சரி. இரண்டாவது நபர் என்ன செய்துள்ளார் என பார்க்கலாம் என்று அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாம் நபர் தன்னுடன் 100 பேரை, அழைத்து வந்திருந்தார். “தங்கக்கட்டியை என்ன செய்தீர்கள்? இவர்கள் எல்லாம் யார்?” என்று அரசர் வினவினார். அதற்கு அந்த இரண்டாம் நபர், “இவர்கள் எல்லாம் இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள்.

நீங்கள் கொடுத்த தங்கக்கட்டிகளை இவர்களுக்கு பிரித்துக்கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வியாபாரம் செய்து இவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்” என்று கூறினார். தன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாம் நபரே நாட்டை ஆளத்தகுதியான நபர் என, அரசரும் அந்த அவையில் இருந்தவர்களும் முடிவு செய்தனர்.

இந்த கதையில் வரும் இரண்டாம் நபரைப்போல தான் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலத்திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. என்று ஜெயலலிதா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.