Freedom 251 – புரியாத புதிரா?

freedom-251-e-1

இந்தியாவில் செம ஹாட்டான செய்தி என்றால் சென்றவாரத்தில் இந்தியாவையே கலக்கிய இந்த ஃப்ரீடம் 251 தான். இந்த மொபைல் விற்பனை தொடங்கிய நிமிடத்தல் இருந்து பல்லாயிரம் ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் இந்த மொபைல் வருமா வராதா என்று பல கேள்விகளை கேட்க தருகின்றது.

இந்நிலையில், இந்த நிறுவனம் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

1. அரசாங்கத்தின் மானியம் இல்லாமல், 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாக எழுந்துள்ளது. சந்தையில் விற்பனையாகும் ஸ்மார்ட்ஃபோனின் விலையில் இருந்து 10 – 15 மடங்கு குறைவான விலை எப்படி சாத்தியம் ?

2. ஸ்மார்ட்போன் தொடக்க விழாவில் பேசிய ரிங்கிங் பெல் நிறுவனத்தின் தலைவர் சத்தா, 3 லட்சம் ஹாண்செட்கள் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதுவரை சந்தைக்கு வராத ரிங்கிங் பெல் தொடக்கத்திலேயே, 3 லட்சம் வரை உற்பத்தி செய்வது என்பது கேள்வியாகவே உள்ளது.

3. முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூன் 30-க்குள் டெலிவரி செய்துவிடுவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. லட்சக்கணக்கான ஆர்டர்கள் வரும் பட்சத்தில் மூன்று மாதங்களில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருவது எப்படி சாத்தியம்?

4. ரிங்கிங் பெல் நிறுவனம் ஊடகங்களுக்கு மாதிரிகளை அனுப்பி இருந்தது. அதில், ஆட்காம் என்ற நிறுவன தயாரிப்பில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போனை ஒத்திருந்த அமைப்புகள் கொண்டதாக இருந்தது. இது தொடர்பாக, நிறுவன தலைவர் சத்தா தெரிவித்தபோது, டச் பேனலும் (தொடுதிரை), வெளிப்புற அமைப்பும் ஆட்காம் தயாரிப்பு என்றார். இதன் மூலம் தயாரிப்பு மற்றும் கருவியின் தரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

5. இதுவரைக்கும், ரிங்கிங் பெல் நிறுவனத்தின் உற்பத்தி எங்கு நடக்கிறது என்பது தெரியவில்லை. செய்தி நிறுவனமான நியூஸ் செவன் நடத்திய கள ஆய்வில், பல நாட்களாக ரிங்கிங் பெல் நிறுவனம் மூடியே இருப்பதாக அறிய முடிந்தது. நிறுவனம் உறுதி அளித்துள்ள ஜூன் 30 க்குள், உற்பத்தி செய்து, சோதனை நடத்தி, சந்தைக்கு வர சாத்தியமா ?

6. எல்லாவற்றிற்கும் முக்கியமானது தரம் மற்றும் அதற்கான சான்றிதழ். இதனை பெற ஒரு புதிய நிறுவனம் பல நாட்களை எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள் துறை சார்ந்தவர்கள். இதற்கு முன் தர சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும், அவர்கள் தெரிவித்த காலத்தில் வாடிக்கையாளருக்கு ஸ்மார்ட் போனை அளிக்க முடியும்.

ஆனால், ரிங்கிங்பெல் நிறுவனம் அவ்வாறான சான்றிதழை பெறவில்லை. ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்ட உலோகமோ, பிளாஸ்டிக்கோ நச்சு தன்மை வாய்ந்ததா, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடியதா , பேட்டரி தரமிக்கதா, வெடிக்குமா?, ரேடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு தாக்கம் எவ்வளவு என்பனவற்றையெல்லாம் சோதிக்காமல், பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு சான்றிதழ் தராது. இனிதான் அவற்றை ரிங்கிங்பெல் செய்யுமானால், எப்போது வாடிக்கையாளருக்கு ஸ்மார்ட் போனை வழங்கும் என்பது கேள்விக்குறி ?

7. மோடியின் மேக் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அம்சங்களை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஃபீரிடம்251 ஸ்மார்ட்ஃபோன் இருக்கும் என்று தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்ஃபோனின் பாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்று நிறுவன தலைவர் சத்தா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

8. ஃபீரிடம்251 ஸ்மார்ட்ஃபோனில் உள்ள ஐகான்கள் ஆப்பிள் ஃபோனில் உள்ளது போன்றே இருப்பதால், இது காப்புரிமை சிக்கலுக்கும் கொண்டு செல்லும் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தனையும் தாண்டி தான் ப்ரீடம்251 ஆனது ஆர்டர் கொடுத்தவர்களின் கைக்கு வந்து சேரும்?.

Leave a Reply

Your email address will not be published.