விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – 7 பேருக்கு உடல் தானம்

baa42825-7e30-41fd-ae6a-a3761bc91845_S_secvpf

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை யைச் சேர்ந்தவர் வனிதா. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் காளிமுத்து (22), பெயின்டராக வேலை செய்து வந்தார். கடந்த 22-ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே மினிலாரி மோதியதில் காளிமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை அவர் மூளைச்சாவு அடைந்தார். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய காளிமுத்துவின் பெற்றோர் முன்வந்தனர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மைய இயக்குநர் டாக்டர் பி.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து காளிமுத்துவின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கண்களை எடுத்தனர்.

கல்லீரலும் ஒரு சிறுநீரகமும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளி களுக்கும், மற்றொரு சிறுநீரகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. இதயமும் நுரையீரலும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கு பொருத்துவ தற்காக கண்கள் வழங்கப்பட்டன. உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.