இஷ்ரத் ஜகான் யார்….புதிய சர்ச்சை…..!

ishrat-jahan-L

குஜராத் மாநிலத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனக்கூறி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், மும்பை தாக்குதல் வழக்கில் சமீபத்தில் வாக்குமூலம் கொடுத்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி, இஷ்ரத் ஜகான் ஒரு லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதி என கூறியிருந்தார். மேலும், லஷ்கர்–இ–தொய்பா அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தியாகிகள் பட்டியலில் இஷ்ரத் ஜகானின் பெயர் இடம் பெற்றிருந்தது என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை சமீபத்தில் கூறியுள்ளார்.

ஆனால், அது நீக்கப்பட்டு விட்டதாக கூறியிருந்த அவர், இஷ்ரத் ஜகான், லஷ்கர்–இ–தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதியா? இல்லையா? என்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த 2 பிரமாண பத்திரங்கள் முரணானது எனவும், அது அரசியல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும் ஜி.கே.பிள்ளை கூறினார்.

இந்நிலையில், இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமாண பத்திரத்தை மாற்றம் செய்தது யார்? என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.