ஏசு கிறிஸ்து ஒரு இந்தியரா? புது சர்ச்சையை கிளப்பியுள்ள 75 ஆண்டு பழைமையான புத்தகம்

download

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், ஹிந்துத்துவ சிந்தனையாளருமான வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வி.டி.சாவர்க்கரின் சகோதரர்கள் எழுதிய படைப்புகளைப் பாதுகாத்து, பிரசுரம் செய்யும் பணியை எங்கள் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த “விஸ்வகர்மா-பிராமண’ இனத்தைச் சேர்ந்தவராகச் சித்திரிக்கும் “கிறிஸ்தவ பரிச்சய்’ என்ற மராத்தி புத்தகத்தை சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கர், கடந்த 1946ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்தப் புத்தகம், வி.டி.சாவர்க்கரின் நினைவு நாளான வரும் 26ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தில், சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவை மக்கள் காப்பாற்றி, இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைச் செடிகளைக் கொண்டு அவருக்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றியதாகவும்,பின்னர் காஷ்மீரில் ஏசு மறைந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது அரபு நாடுகளாகவும், பாலஸ்தீனமாகவும் இருக்கும் நிலப்பரப்புகள் அந்தக் காலத்தில் ஹிந்துக்களின் பகுதிகளாக இருந்தன. மேலும், யோகா பயில்வதற்காக ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்துள்ளார். ஏசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா என்றும், தமிழ் அவரது தாய் மொழி என்றும், அவர் கருப்பாக இருந்ததாகவும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் ரஞ்சித் சாவர்க்கர்.

இதுதொடர்பாக, மும்பையைச் சேர்ந்த மூத்த கிறிஸ்தவப் போதகர் வார்னர் டி செளஸா கூறுகையில், “”இத்தகைய புத்தகங்களால், கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தளர்ச்சி அடையாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.