ஜெ. வின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் – கர்நாடக அரசு

tamil-nadu-cm-jayalalithaa-presenting-free-laptop
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் இறுதி விசாரணை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு விதித்தார்.
தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, விசாரணை முடிவில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்து கீழ்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்தார். பின்னர், 4 பேரின் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இதே போல் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், ’வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும்’ என தெரிவித்தது, வழக்கை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 2 முதல் இறுதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் திடீரென இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரிப்பதால் ஒரு வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்கப்பட்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதா தரப்பு அவகாசத்தை நீதிபதிகள் நிராகரித்து கர்நாடகா அரசு இறுதிவாதத்தைத் தொடங்க அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது வாதங்களை முன்வைத்தார். தவே தமது வாதத்தில், ஜெயலலிதாவின் சொத்துகளை கர்நாடகா உயர்நீதிமன்றம் மதிப்பிட்டதில் பிழைகள் உள்ளன.
ஜெயலலிதா உள்ளிட்டோர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் நிரூபித்திருந்தும் கண்டுகொள்ளாமல் மேம்போக்காக விசாரித்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்துவிட்டது என்றார். மேலும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பிரமாண்டமானது. நமது எம்ஜிஆர் நாளேட்டுக்காக ரூ14 கோடி சந்தா சேர்த்தாக கூறப்படுவதை நம்பவே முடியவில்லை. இந்த சந்தா முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே, ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று தவே வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளை பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை 2வது நாளாக கர்நாடகா அரசு சார்பில் துஷ்யந்த் தவே தொடர்ந்து தமது வாதங்களை முன்வைப்பார்.

Leave a Reply

Your email address will not be published.