தென்னிந்திய அழகியை கடத்தி 10 லட்சம் கேட்ட கும்பலை போலீஸார் மடக்கி பிடித்தனர்

34a3babc-097d-4a09-9473-d8c29bf7fbee_S_secvpf

நடிகை ஒருவரை கடத்திச்சென்று சித்ரவதை செய்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கூண்டோடு மாட்டிக்கொண்டது. 

சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா (வயது 22). இவர் தென் இந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் 3 குறும்படங்களில் நடித்துள்ளார். 3 சினிமா படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவரது தாயார் பெயர் ஜானகி. கடந்த 16-ந் தேதி அன்று நடிகை நிஷா, தனது தாயாருடன் சென்னை தியாகராயநகர் வந்தார். அப்போது சொகுசு கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள், நிஷாவை கடத்திச் சென்று விட்டனர். நிஷாவை குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றிச்சென்றனர். தாயார் ஜானகி கூச்சல் போட்டார். பின்னர் தனது மகள் கடத்தப்பட்டது குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நடிகை நிஷாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இந்த சம்பவம் தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி, கடத்தல் கும்பலை கைது செய்யுமாறு கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் தியாகராயநகர் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். கடத்தப்பட்ட நடிகையின் செல்போன் நம்பர் மூலம், அவர் கடத்தி செல்லப்பட்ட இடத்தை போலீசார் கண்டறிந்து பின்தொடர்ந்தனர். கடத்தல்காரர்கள் நடிகை நிஷாவை கோவா உள்பட பல வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று அவரை சித்ரவதை செய்தனர்.

நிஷாவை விடுதலை செய்ய ரூ.10 லட்சம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். இறுதியில் நடிகை நிஷாவை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் சிறை வைத்தனர்.ரூ.10 லட்சம் பணம் தருவதாக நடிகை நிஷா ஒப்புக்கொண்டதன் பேரில் அவரை கடத்தல்காரர்கள் சென்னைக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. நேற்று தனிப்படை போலீசார் கடத்தல்காரர்கள் 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நடிகை நிஷா பத்திரமாக மீட்கப்பட்டார்.

கைதானவர்களில் முக்கியமானவர் பஷீர் (27). இவரும் சென்னை போரூரைச் சேர்ந்தவர். கைதான மற்ற இருவர் பெயர் ராம்குமார் (24), மணி (23) என்பதாகும். இவர்கள் இருவரும், பஷீரின் கூட்டாளிகள் ஆவார்கள்.

பஷீர், போரூர் பகுதியில் கேபிள் டி.வி. தொழில் செய்கிறார். தொழில் ரீதியாக கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் செல்லும் இடங்களில் வசிக்கும் அழகான பெண்களுக்கு காதல் வலை வீசி, திருமணமும் செய்து கொள்வார். ஏற்கனவே இதுபோல் 2 பெண்களுக்கு காதல் வலை வீசி திருமணம் செய்துள்ளார். ஒரு பெண் குழந்தை உள்ளது. நடிகை நிஷாவையும் இதுபோல் காதலித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துள்ளார். பஷீர் ஏற்கனவே 2 பெண்களை மணந்த தகவல் தெரிய வந்த உடன் நிஷா, பஷீரை விட்டு பிரிந்து வந்து விட்டார். இதனால் அவரை கடத்திச்சென்று பஷீர் பணம் கறக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான பஷீர் உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் நேற்று புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் நிஷா தனது மனைவி என்றும், அவரை கடத்திச்செல்லவில்லை என்றும், பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் பஷீர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.