எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து நிற்கின்றது தேமுதிக

maxresdefault

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்று இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். 23 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. சட்டசபையில் 3-வது பெரிய கட்சியாக விளங்கியது.

ஆனால் தேர்தல் நடந்து சில மாதங்களிலேயே அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. சட்டசபையில் இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் மோதிக்கொண்டனர். அ.தி.மு.க. மீது விஜயகாந்த் கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதற்கிடையே, தே.மு.தி.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

இந்த நிலையில் தே.மு.தி.க.வில் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை மத்தி தொகுதி), நடிகர் செ.அருண்பாண்டியன் (பேராவூரணி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), ஆர்.சாந்தி (சேந்தமங்கலம்), தமிழழகன் (திட்டக்குடி), ‘மாபா’ பாண்டியராஜன் (விருதுநகர்), மு.அருண் சுப்பிரமணியன் (திருத்தணி), சுரேஷ்குமார் (செங்கம்) ஆகிய 8 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். அவர்கள் தனித்தனியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள்.

அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த அவர்கள் சட்டசபையில் தனித்தே செயல்பட்டனர். அவர்களுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.  இதேபோல் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆ.ராமசாமி, பா.ம.க.வைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ம.கலையரசு ஆகியோரும் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டு வந்தனர்.

தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ஆர்.சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், ஆர்.சாந்தி, க.தமிழழகன், ‘மாபா’ பாண்டியராஜன், மு.அருண் சுப்பிரமணியன், டி.சுரேஷ் குமார் ஆகிய 8 பேரும் ஒன்றாக சேர்ந்து நேற்று திடீரென்று சபாநாயகர் தனபாலை சந்தித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அவரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதேபோல் புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ. ஆ.ராமசாமி, பா.ம.க. அதிருப்தி எம்.எல்.ஏ. ம.கலையரசு ஆகியோரும் சபாநாயகர் தனபாலை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதுகுறித்து சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து 21-ந் தேதி (நேற்று) முதல் திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மு.அருண் சுப்பிரமணியன், பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செ.அருண்பாண்டியன், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.சாந்தி, மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி.சுரேஷ்குமார், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.தமிழழகன், விருதுநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாபா பாண்டியராஜன், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் விலகி உள்ளனர். அப்பதவி விலகல்களை, பேரவை தலைவர் அத்தேதியில் இருந்து ஏற்றுக்கொண்டு உள்ளார்.

இதேபோல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராமசாமி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ம.கலையரசு ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து 21-ந் தேதி முதல் விலகி உள்ளனர். அப்பதவி விலகலை, பேரவை தலைவர் அத்தேதியில் இருந்து ஏற்றுக்கொண்டு உள்ளார்.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, சட்டசபையில் அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்து விட்டது. தமிழக சட்டசபையில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமானால், அந்த கட்சிக்கு குறைந்த பட்சம் 24 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் 28 உறுப்பினர்களை கொண்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டதால் அக்கட்சியின் பலம் 20 ஆக குறைந்துவிட்டது. இதனால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்து விட்டார்.

இதுபற்றி சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதால், சட்டமன்ற பேரவை விதி 2(ஓ)-ன்படி எதிர்க்கட்சி தலைவராக பேரவை தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழப்பதன் காரணமாக, அவர் எதிர்க்கட்சி தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழக்கிறார்.

மேலும் தற்போது சட்டமன்றத்தில் 24 குறைவெண் கொண்ட எந்த சட்டமன்ற கட்சியும் இல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் என்று வேறு எந்த சட்டமன்ற கட்சி தலைவரையும் அங்கீகரிக்க இயலாது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்துள்ள 10 பேரும் விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.