தலையில் கம்பி குத்தியதால் பேசும் திறன் பறிபோன பரிதாபம்

e5bcc0d2-fe76-4af6-b34c-e063946e034f_S_secvpf

மும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், கட்டுமான தொழிலாளியாக முகமது குட்டு (வயது 24) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கட்டிட வளாகத்தில் சிமெண்டு கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்த 7 அடி நீள இரும்பு கம்பி ஒன்று அவரது தலையில் விழுந்தது.

அந்த கம்பி தலையின் ஒருபுறமாக பாய்ந்து மறுபுறமாக வெளியே வந்தது. தலையில் இரும்பு கம்பி பாய்ந்தபடி உயிருடன் போராடிய அவரை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மும்பை சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அவரது தலையில் பாய்ந்த இரும்பு கம்பியை வெற்றிகரமாக அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். முகமது குட்டு அதிசயமாக உயிர் பிழைத்தார்.

அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு டாக்டர்கள் தீவிர மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையில், அவரது இடதுபுற மூளையை இரும்பு கம்பி துளைத்து கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, பேசும் திறனை இழந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து முகமது குட்டுவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதே போன்று கட்டுமானப்பணியின் போது 17 வயது பெண் ஒருவருக்கு இடுப்பில் முன்று கம்பிகள் குத்திய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.