ஜெ. மேல் முறையீடு மேலும் தள்ளி வைக்க கோரிக்கை

images (2)

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு மனு மீதான‌ விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் 2-ம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இறுதிவாதம் வருகிற 23-ம் தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் பிப்ரவரி முதல் வாரத்தில் இறுதி வாதம் தொடங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த மாத இறுதியில் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு வழக்கை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவை ப்பதாக அறிவித்துள்ளது.

இதனிடையே ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எல்.நாகேஷ்வர ராவ் நேற்று நீதிபதி பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கி அமர்வு முன்னிலையில் ஆஜராகி, ”உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டு வருகிறேன். தொடர் வேலைப்பளுவின் காணமாக ஜெயலலிதா வழக்கில் வாதிட இறுதிவாதம் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதி பினாகி சந்திர கோஷ், உங்கள் (ஜெயலலிதா) தரப்பின் சார்பாக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுங்கள். வருகிற 23-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மீண்டும் நினைவூட்டுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தரப்பு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்தனர்.இதனால் ஏற்கெனவே அறிவித்தபடி சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இறுதிவாதம் வருகிற 23-ம் தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.