மதுரையில் பாலத்தில் இருந்து குதித்து மின்சாரம் தாக்கி இறந்த வட மாநில இளைஞன்- வீடியோ

hqdefault (1)
மதுரை எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் மதியம் சுமார் 2½ மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் பாலத்தின் உச்சிக்குச் சென்று அங்குள்ள கான்கிரீட் தள தூண்களில் இங்கும், அங்கும் ஓடி தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.
அப்போது, அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கூட்டம் கூடியது. இது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது நின்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய நபரை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர். ஆனால், அவர் வரமறுத்தார்.
அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பேசிய மொழியை புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. இந்நிலையில், அந்த வாலிபரை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அதில் உள்ள ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் ஏறி அவருடன் பேச முற்பட்டனர்.ஆனால், மேலே வந்தால் கீழே குதித்து விடுவதாக அந்த வாலிபர் தொடர்ந்து கூறிவந்தார். இதைத் தொடர்ந்து அந்த முயற்சியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டனர். எனவே, அந்த வாலிபர் கீழே குதித்தால் அடிபடாமல் இருப்பதற்காக மேம்பால பகுதியிலும், ரயில்வே தண்டவாள பகுதியிலும் தீயணைப்புப் படை வீரர்கள் வலை விரித்தனர்.

அப்போது, அந்த வழியாக பஞ்சு மூட்டை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி, பாலத்தின் குறுக்கே நிறுத்தி அதில் குதித்து கீழே இறங்கி வருமாறு அந்த வாலிபரிடம் கூறினர். இதை அந்த வாலிபர் ஏற்கவில்லை. அப்போது, தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து அவர் யாரிடமோ, நீண்ட நேரம் பேசினார். பின்னர் கீழே இறங்கி வந்து விடுவதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து, அந்த வாலிபரை பாலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் காவ்லதுறையினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். சுமார் 2½ மணிநேரத்துக்கும் மேலாக அந்த வாலிபர் மேம்பாலத்தில் இருந்தார். பின்னர் அவர் திடீரென்று பாலத்தில் இருந்து ரயில்வே தண்டவாளப் பகுதியில் குதித்தார்.
அப்போது, தண்டவாளத்தின் மேலே சென்ற மின்சார ரயில் உயர் மின் அழுத்த வயர் மீது அவர் உடல் உரசியது. இதனால், அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் மயங்கடைந்த அந்த வாலிபர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வாலிபர் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.