மு.க. ஸ்டாலின் மருமகன் பேச்சை எடுத்ததால் நேற்று சட்டசபை அமளி

1-Copy83

நேற்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின் போது உறுப்பினர் மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) பேசினார். அவர் தனது உரையை முடிக்கும்போது, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவைக்குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் சில தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் அருகில் வந்து அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தினார்கள். சபாநாயகர் அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு கூறினார். ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு, கோஷமிட்டபடியே இருந்தனர். இதனால் சபையில் கூச்சலும், குழப்பமும் நீடித்தது.

தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், சபாநாயகர் தனபால் மேஜை மீது இருந்த மணியை அடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சபாநாயகரை நோக்கி சில வார்த்தைகளையும் அவர் கூறினார். அப்போது பேசிய சபாநாயகர், ‘தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் முறைகேடாக நடந்து கொள்கிறார். இது தவறு. உறுப்பினர் பேசியதை வாசித்து பார்த்து பிறகு நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார்.

அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் உறுப்பினர் ஏதாவது ஆட்சேபணைக்குரிய வார்த்தைகளை தெரிவித்து இருந்தால் சபாநாயகரிடம் முறையாக தெரிவிக்கலாம். ஆனால் சபாநாயகரை ஒருமையில் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கிடையே உறுப்பினர் மு.க.ஸ்டாலின் எழுந்து சில வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் குரல் எழுப்பினார்கள். தங்கள் மேஜையில் இருந்த புத்தகத்தை தூக்கி வீசி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 20 நிமிடங்களுக்கு மேலாக முடங்கியது.

சபாநாயகர்:– தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது நல்லதல்ல. நான் அவை குறிப்பை பார்த்து தான் முடிவு செய்வேன். நான் எடுத்த முடிவை மாற்ற முடியாது. உறுப்பினர் அன்பழகன் என்னை ஒருமையில் பேசுகிறார். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் தி.மு.க. உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.

இதைத்தொடர்ந்து அவையில் கோஷமிட்டப்படி இருந்த தி.மு.க. உறுப்பினர்களை அவைக்காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினர். அப்போது தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், ஒப்பாரி வைத்தபடி கோஷம் எழுப்பினார். அவைக்காவலர்கள் அவர்களை ‘லாபி’ வரை வெளியேற்றிய பின்னரும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றொரு வாசல் வழியாக மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்து சபாநாயகரை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை மீண்டும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கூடுதல் அவைக்காவலர்கள் வந்து துரைமுருகன் உள்பட அனைத்து தி.மு.க. உறுப்பினர்களையும் வெளியேற்றினர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தி.மு.க.வை பற்றியும், என்னுடைய மாப்பிள்ளை சபரீசன் பற்றியும் தேவையற்ற கருத்துகளை தெரிவித்தார். அவைக்குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் சபாநாயகர் ஏற்கவில்லை.

அதே நேரத்தில் நான் பேசியதை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகருடைய தீர்ப்பு சந்தி சிரிக்கிறது. இப்படிப்பட்ட சபாநாயகரைத்தான் 5 ஆண்டுகளாக நாம் பெற்று இருப்பது வேதனைக்குரியது, வெட்கத்திற்குரியது. என்று ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையை புறக்கணிப்பது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அமைச்சர்களும் எது பேசினாலும் அதனை அனுமதிப்பதும், ஜனநாயக உணர்வோடு, தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் பதில் கூற முனைந்தாலும், அதற்கு அனுமதி மறுப்பதும் தான் தொடருகிறது.

பேரவைத்தலைவர் இவ்வாறு நடந்து கொள்ளும்போது, ஆளுங்கட்சியை சேர்ந்த முதல்–அமைச்சரோ, மூத்த அமைச்சர்களோ எழுந்து சமாதானம் செய்யும் போக்கும் இந்த ஆட்சியிலே கிடையாது.

பேரவைத்தலைவர், முதல்–அமைச்சர் உள்பட அனைவரின் மரியாதைக்கு கட்டுப்பட்டவர். ஆனால் இன்றையப் பேரவைத்தலைவர், அந்த ‘பதவிக்கே’ இழுக்கு தேடும் அளவுக்கு, முதல்–அமைச்சர் முன்னால் வளைந்து குனிந்து பூச்செண்டு அளிக்கிறார் என்பதை காணலாம். 5 ஆண்டு கால ஆட்சியில் எதிர்க்கட்சிகளை எத்தனை முறை அவையில் இருந்து வெளியேற்றினார்கள் என்ற கணக்கைப் பார்த்தாலே ஆளுங்கட்சியினரின், குறிப்பாக பேரவைத்தலைவரின் ஜனநாயக அணுகுமுறை எத்தகையது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அது போலவே பிரதான எதிர்க்கட்சியும், அதன் உறுப்பினர்களும், அதற்கு அடுத்த நிலையிலிருந்து தி.மு.க.வும், அதன் உறுப்பினர்களும் பேரவை நடவடிக்கைகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை, அவை நடவடிக்கைகளைக் கவனித்தாலே, பேரவைத்தலைவர் எதிர்க்கட்சிகள் மீது எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆளுங்கட்சி தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதால், தாங்கள் எதை நினைத்தாலும் செய்யலாம் என்ற போக்கில் நடந்துகொள்கிறார்கள். அலுவல் ஆய்வு குழுவாக இருந்தாலும், உரிமைக் குழுவாக இருந்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதே இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளுநர் உரை விவாதத்தின் போதும் தி.மு.க. உறுப்பினர்களின் பேச்சைக் கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லாமல் அமைச்சர்களும், குறிப்பாக பேரவைத்தலைவரும் நடந்துகொண்டார்கள்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகின்ற இன்று (நேற்று) கூட தி.மு.க.வின் சார்பில் பேசுவதற்கு தி.மு.க. உறுப்பினர் எ.வ.வேலு காத்திருந்தபோது, அதற்கு முன்பு பேசிய ஆளுங்கட்சி உறுப்பினர் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக பேசுவதும், அதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் பதில் சொல்ல அனுமதி மறுப்பதும், தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்கள் எதிர்க் கருத்துகளைச் சொன்னால், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னையோ, என் குடும்பத்தினரையோ எப்படி பேசினாலும் அதை அனுமதிப்பதும் என்ற போக்கில் பேரவை நடைபெறுகிறது.

இந்த நிலையில் பேரவையில் தி.மு.க. இனியும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டுமா? என்பதை பற்றி ஆய்வு செய்து, கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்வதோடு, ஆளுங்கட்சியினரின் இப்படிப்பட்ட அடாவடிப் போக்கினை மக்கள் மன்றத்தின் முன் எடுத்து வைப்பது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.