இனிமேல் படிக்காத மாணவர்களுக்கு TC கொடுத்தால் பள்ளியின் மீது நடவடிக்கை

sample-TC

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி மாற்றுச் சான்றிதழ் (டி.சி) அளித்து மாணவர்களை பள்ளியை விட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒரு சில மாவட்டங்களில் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அரசுப் பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் பள்ளி மாற்றுச் சான்றிதழ் அளித்து மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்புவதால் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் இதுபோன்ற செயல்கள் செய்வது தவறான செயலாகும். மாணவர்களை நன்கு படிக்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்புவது மாணவர்களின் நலன் மற்றும் நிர்வாக நலனுக்கு உகந்ததல்ல.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், குறைந்தபட்ச மதிப்பெண் பெறவும் கற்றல் உபகரணங்கள், குறுந்தகடுகள், கையேடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது, மேற்குறித்த கையேடுகள், உபகரணங்கள் மூலம் அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு ஏற்கனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவையாவும் ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு தலைமைஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்பதை மனதில் கொண்டு தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை முழுவதுமாக நம்பி பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள். தமிழக அரசும் மாணவர்களின் நலன்களில் அக்கறைக்கொண்டு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கியுள்ள இத்தருணத்தில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதுபோன்று நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏதும் நிகழாத வண்ணம் கண்காணிக்கவும் அனைத்து வகைப்பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் சிறந்த முறையில் தேர்வு எழுத அவர்களுக்கு தேவையான அனைத்து வகையிலும் ஊக்கம் அளித்து தேர்வினை நன்முறையில் எழுதி முடிக்க பயிற்சி அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணியில் முனைப்புடன் செயல்படவும் பொதுத் தேர்வினை செவ்வனே நடத்த அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.