ராணுவ வீரர் அனுமந்தப்பா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

hanumanthappakoppad1

ஹூப்ளியில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்களில் கர்நாடகாவை சேர்ந்த ஹனுமந்தப்பா மட்டும் 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து டெல்லியில் வைக்கப்பட்டுள்ள ஹனுமந்தப்பா உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படை தளபதிகள், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பின்னர் தனி விமானம் மூலம் நேற்று இரவு ஹனுமந்தப்பா உடல் கர்நாடக மாநிலம், ஹூப்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள நேரு விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரரின் உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா, மத்திய அமைச்சர் அனந்த்குமார் உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஹனுமந்தப்பா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாலையில் சொந்த ஊரான தார்வார் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 33 வயதான ஹனுமந்தப்பா, 19-வது மெட்டராஸ் படைப்பிரிவில் கடந்த 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்து திறம்பட பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.