கள்ளக்காதலால் மகனையே கொன்று படுக்கை அறையில் புதைத்த தாய்

murderAFP

தில்லியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொன்று படுக்கையறையில் புதைத்த தாய் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தில்லி ஜே.ஜே. காலனியைச் சேர்ந்த வரிதா (40). விவாகரத்தான இவர் தனது மகனுடன், தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். ஒரு நாள் திடீரென, கடந்த ஆண்டு வரிதாவும், அவரது மகன் நிக்கோலசும் (15) காணாமல் போயினர். இது குறித்து ஜோசப் ஜான் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஒரு மாத காலத்துக்குப் பின் நிக்கோலஸ் தனது தாத்தாவுக்கு போன் செய்து, நாங்கள் புனேயில் இருக்கிறோம், தாய் வரிதா, வேறு ஒருவருடன் வாழ்வதாகவும், தாயுடன் இருக்க தனக்கு விருப்பமில்லை என்றும் பேசிக் கொண்டிருக்கும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு அந்த போன் சுவிட்ச் ஆப் ஆகியே இருந்தது.

இந்த நிலையில், தில்லி வந்த வரிதா, தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக தந்தையிடம் கூற, அவரோ சந்தேகம் அடைந்து மீண்டும் காவல்நிலையம் சென்றார். உடனடியாக விசாரணையைத் துவக்கிய காவலர்கள், நிக்கோலஸ் கடைசியாக பேசிய செல்போன் அலைவரிசையை வைத்து அவரது வீட்டை கண்டுபிடித்தனர். வீடு பூட்டியிருந்த நிலையில் வீட்டு உரிமையாளரிடம் விவரம் கேட்டனர். அப்போது, வரிதாவும், யூனிஸ்கான் என்பவரும் தம்பதி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்ததாகவும், உறவினர் மரணத்துக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் தரை புதிதாக போடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறை, தோண்டிப் பார்க்க, அங்கு நிக்கோலஸ் உடல் அழுகிய நிலையில் புதைக்கப்பட்டிருந்தது. உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், அவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தாய் வரிதா, யூனிஸ்கானை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.