வேலூரில் விண்ணில் இருந்து எரிகல் விழுந்து டிரைவர் பலி

bomb

வேலுார் அருகே, கல்லுாரியில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில், அது வானிலிருந்து விழுந்த எரிகல் என கூறப்படும் நிலையில், எரிகல் விழுந்தால் வெடிக்காது என, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மத்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகளும், எரிகல் விழுந்ததாக ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று கூறுவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, பாரதிதாசன் பொறியியல் கல்லுாரி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த டிரைவர் காமராஜ் இறந்தார். வானிலிருந்து விழுந்த எரிகல் வெடித்து விட்டதாக தகவல் பரவியது.

எஸ்.பி., செந்தில்குமாரி, டி.ஐ.ஜி., தமிழ்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.கல்லுாரி வளாகத்தில் உள்ள பாறைகளை தகர்க்க, சக்தி வாய்ந்த நாட்டு குண்டுகளை வைத்து உடைத்ததும், அதில் வெடிக்காமல் இருந்த குண்டு வெடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: கடந்த மாதம், 26ம் தேதி, வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு பகுதியில், பழனி என்பவர் நிலத்தில், வானிலிருந்து மர்ம பொருள் விழுந்து, 3 அடியில் பள்ளம் ஏற்பட்டது. அதன் அருகே, மூன்று எரி கற்களை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அதன் அருகில் மறுபடியும் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்துள்ளது.

இந்த, இரண்டு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆயிரக்கணக்கான கி.மீ., துாரத்தில் இருந்து எரி கற்கள் கீழே விழும்போது, பயங்கர சத்தத்துடன் வெடிக்காது. ஆனால், கல்லுாரியில் மர்ம பொருள் விழுந்த இடத்தில், பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட கற்களை ஆய்வு செய்த பின்னரே, முழு தகவல்கள் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.