மூன்று மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யவில்லை – திடீர் திருப்பம்

1453719922-7087

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பிரியங்கா, சரண்யா மற்றும் மோனிஷா ஆகிய மூன்று பேரின் சடலங்களும், கடந்த ஜனவரி 23ஆம் தேதி கல்லூரி அருகிலுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.

கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை காரணமாக மாணவிகள் மூவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. அதற்கேற்ப மாணவிகள் எழுதியதாக சொல்லப்பட்ட கடிதமும் வெளியிடப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகமே மாணவிகளை அடித்துக் கொன்று அவர்களை கிணற்றில் போட்டுள்ளனர் என்று பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சின்னசேலம் போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள் கல்லூரித் தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி (சுப்பிரமணியன் மனைவி), இவர்களது மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, கல்லூரி ஆதரவாளர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர்வர்மா ஆகியோரை கைது செய்தனர்.

கல்லூரி தாளாளர் வாசுகி தாம்பரம் நீதிமன்றத்திலும், வெங்கடேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே மாணவிகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர்களின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் தமிழரசன் தனது மகள் அங்கு நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவி மோனிஷாவின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், திடீரென இவ்வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார். சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.

இக்குழு மாணவிகள் மரணம் தொடர்பாக கல்லூரி தாளாளர் வாசுகி, நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கல்லூரியின் பிற மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவிகள் மோனிஷா, சரண்யா ஆகியோரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை திங்களன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், மாணவிகள் நீரில் மூழ்கி இறந்திருந்தால், அவர்களது நுரையீரல்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும்; ஆனால், அவ்வாறு இல்லை. எனவே, மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை; அதற்கான தடயங்கள், ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாணவிகளின் மூச்சு நிறுத்தப்பட்டதால், மூச்சுத் திணறியே அவர்கள் இறந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையின் நகல்கள், மாணவிகளின் பெற்றோருக்கும் வழங்கப்பட்ட நிலையில், அவர்களிடம் மறு பிரேதப் பரிசோதனை தேவையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இதுகுறித்து தங்களது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டியது உள்ளது என்று பெற்றோர்கள் கூறினர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.