தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பா…..?

download (24)

தமிழகத்தில் ஜிகா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸ் தொடர்பாக தொற்று நோய் தடுப்பு ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத்துறை பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவ கல்லூரி டீன் விமலா, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டீன் நாராயண பாபு மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஜிகா வைரஸ் தொடர்பாக தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலையில் வைத்திருப்பதுடன் நோயாளிகளுக்கு அதுகுறித்த அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக நோயாளிகளுடைய ரத்தம் மாதிரி பரிசோதனை கூடத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

பின்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஜிகா வைரஸ் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெளிநாடுகளில் குறிப்பாக, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு நோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களில் இது ஒரு வகையாகும். இந்த கொசு கடிப்பதால் சிறிய அளவில் காய்ச்சல் பரவுகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு இந்த காய்ச்சல் வந்தால் கருவிலுள்ள குழந்தை பாதிக்கப்படும் என்பதால் தமிழகத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூலமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மருத்துவ சோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய்க்கான அறிகுறி இல்லை என்பதால் கர்ப்பிணி பெண்கள் பயப்பட தேவையில்லை.

பொது சுகாதாரத்துறையும் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுதவிர மருத்துவமனைகளில் வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு தெரியவந்தால் அவருடைய ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைரஸ் மையத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மத்திய அரசும், முதல்கட்ட ஆய்வுகளை அனுப்பவும் கூறியுள்ளது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட ஆய்வில் இந்த நோய் கிருமிகள் இல்லை என்பதால் பயப்பட வேண்டாம். அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கும் உரிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நோய் தொடர்பாக இறப்பு எதுவும் இல்லை. நோய் பரவுவதாக இருந்தால் முற்றிலும் தடுப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது.

கொசுவால் பரவும் இந்த வைரஸ் குறித்து பல நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இந்தியாவும் ஒன்றாகும். எனவே தமிழகத்துக்குள் இந்த வைரஸ் பாதிப்புள்ள யாரும் வருகிறார்களா என்பது பற்றி அறிவதற்கான சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையுடன் ஒருங்கிணைந்து தமிழக அரசு எதிர்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொடர்பான ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. சிறு காய்ச்சலைத்தான் ஜிகா வைரஸ் கொண்டு வரும் என்றாலும், கர்ப்பிணிகளுக்குத்தான் அது அபாயகரமானது.

எனவே இந்த வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். தடுப்பு நடவடிக்கையின் முதல் கட்டமாக விமான நிலையங்களில் சோதனை சாவடிகள் நிறுவப்பட்டு, இந்த நோய் பற்றிய தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குனரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் மாநில தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:–

இந்தியாவில் இந்த நோய் பரவுவதற்கு சாதகமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. உடலுறவு மூலம் இந்த நோய்க்கிருமி பரவுமா என்பது நிரூபிக்கப்படவில்லை. இதுவரை இந்த வைரசுக்கு யாரும் பலியானதாக தகவல்கள் இல்லை. ஆனால் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் மூளையில் பாதிப்பையும், பலவேறு சிதைவுகளையும் இந்த கிருமி உருவாக்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.