மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

47be527214b90ff066120492c5b0f182_L

மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவி கிணற்றில் குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கெட்டிக்கொம்பை குண்டுபெட்டு காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமன் (45). இவரது மகள் திவ்யா (19) மேட்டுப்பாளையம்-உதகை சாலையிலுள்ள தனியார் கலைக் கல்லூரியின் விடுதியில் தங்கி 2-ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யா செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, திவ்யாவின் பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர் தேடிப் பார்த்தனர். கல்லூரி அருகே உள்ள கிணற்று அருகில் திவ்யாவின் செருப்பு இருப்பதைக் கண்டனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடிய பார்த்தபோது, அங்கு திவ்யாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த திவ்யாவின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட பெற்றோர், தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கல்லூரி விடுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திவ்யா எழுதி வைத்ததா கூறப்படும் கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டம்: இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் திவ்யாவின் சடலம் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், திவ்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, திவ்யாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.