வேலையில் இருந்து நீக்கியதால் செல்போன் டவரில் ஏறிய என்ஜினியர்

1454389814-8614 (1)

தனியார் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஜினியர் செல்போன் டவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (24). பி.இ இன்ஜினியரிங் முடித்திருந்த இவர் சென்னை தரமணியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது.

இவருடன் 300க்கும் மேற்பட்ட இன்ஜினியர்களும் பணியில் இருந்து முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளனர். இதனால், அனைவரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர். குறிப்பாக ஜெயபாலன் கடும் வேதனை அடைந்தார். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் பணியில் இருந்து நீக்கியது நீக்கியதுதான் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று மதியம் ஆலந்தூர் சாலை ஆட்டுத் தொட்டி அருகே இருந்த செல்போன் டவர் மீது ஏறினார். உச்சத்திற்கு சென்ற அவர் என்னை மட்டும் அல்லாமல் பணியில் இருந்து எடுத்த 300 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். இல்லை என்றால் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கோஷமிட்டார். இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 100க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்க்க குவித்தனர்.

தொடர்ந்து சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு படை வீரர்கள் முயற்சியுடன் மீட்க படாத பாடு பட்டனர். எவ்வளவு சமாதானம் சொல்லியும் ஜெயபாலன் கேட்கவில்லை. இறுதியில் பணி வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து வாலிபர் கீழே வர சம்மதித்தார். தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள், பொது மக்கள் உதவியுடன் ஜெயபாலன் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார்.

பின்னர், அவரை விசாரணைக்காக போலீசார் சைதாப்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கிடையில், ஜெயபாலன் மீது பொது மக்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஜெயபாலன் “டவர் மீது ஏறுவதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் அதில், “எனது சாவுக்கு என்னை பணியில் இருந்து நீக்கிய தனியார் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளும்தான் காரணம்.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, குடியரசு தலைவரிடம் ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன். திடீரென 300 ஊழியர்களை பணியை விட்டு தூக்கிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.