பேஸ்புக் மூலம் கிடைத்த தாய் – தத்தெடுத்த மகனுக்கு 25 லட்சம் திருமண பரிசு

fb_2719372f (1)

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக் பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ண மோகன் திரிபாதி (28). பைஸாபாத் தில் உள்ள அவாத் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் திரிபாதிக்கு, அமெரிக் காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டெப் மில்லர் (60) என்பவர் பழக்கமானார். நான்கு வருடங்க ளாக இவர்களது நட்பு நீடித்தது.

ஒரு கட்டத்தில் திரிபாதியின் தாய் இளம் வயதிலேயே மறைந்த செய்தி கேட்டு டெப் கண்கலங்கினார். மேலும் தனக்கு மகன் இல்லாத காரணத்தினால் திரிபாதி மீது தாய்பாசம் காண்பித்தார். அத்துடன் திரிபாதியை சொந்த மகனாக ஏற்றுக் கொள்வதாகவும் பேஸ்புக் மூலம் அறிவித்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த திரிபாதி தனது தாயிடம் பேசுவது போலவே தினசரி பேஸ்புக் மூலம் டெப்பிடம் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட தாகவும், இதில் நேரில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்து டெப் புக்கு, திருமண அழைப்பிதழ் அனுப்பி வைத்தார். ஆனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்படி வருவார் என எண்ணி திருமணத்துக்கான பணிகளில் திரிபாதி மூழ்கிப் போனார்.

திருமண நாள் நெருங்கிய நிலையில் தொலைபேசி மூலம் திரிபாதியிடம் பேசிய டெப் தற் போது தான் டெல்லியில் இருப்ப தாகவும், அங்கிருந்து கோரக்பூ ருக்கு வரும் வழியை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த திரிபாதி, தனது அமெரிக்க தாயை அழைத்து வருவதற்காக உறவினர்களை அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் மூலம் திரிபாதியின் வீட்டுக்கு வந்த டெப், அவரை ஆரத்தழுவி தாய் போல பாச மழை பொழிந்தார்.

அத்துடன் திருமண நிகழ்ச்சியில் பனாரஸ் பட்டு சேலை அணிந்து கொண்டு, புதுமண தம்பதிக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் சீதனமாக வழங்கினார். மேலும் இங்கிலாந்தில் இருந்து ஏலத்தில் எடுக்கப்பட்ட 125 ஆண்டு பழமையான தங்க மோதிரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

திருமணவிழாவில் நேரில் கலந்து கொண்டது குறித்து டெப் கூறும்போது, ‘‘எனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவருடன் பேசும்போது சொந்த மகனுடன் பேசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. மகனாக ஏற்றுக் கொண்டு பாசத்துடன் பழகினேன். திரிபாதியின் அனைத்து விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

இந்தியாவின் பனாரஸ் பட்டுச் சேலை மிகவும் பிடித்து போனதால் 2 டஜன் சேலைகளை டெப் வாங்கியுள்ளார். மேலும் தனது பேஸ்புக் மகனையும், மருமகளையும் விரைவில் அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த டெப், டெல்லி வழியாக மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். திரிபாதி அமெரிக்கா சென்றதும், அவருடன் மீண்டும் இந்தியாவுக்கு வந்து தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கப் போவதாகவும் முன்னதாக டெப் தெரிவித்தார்.

திரிபாதியின் திருமணத்தில் அவரது தாயாக டெப் கலந்து கொண்டு வாழ்த்தி பாச மழை பொழிந்தது திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச மாநில மக்களையும் வியப்படைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.