ஸ்மித் மைக்கில் பேசியதால்தான் கவனம் சிதறி ஆஸி. இந்தியாவிடம் தோற்றதா?

1453863523779 (1)

அடிலெய்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்தது. நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் (21 ரன்) அவுட் ஆனதும், ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது.

இந்த ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் பேட் செய்து கொண்டிருந்த போது அவரது ஹெல்மெட்டில் மைக் பொருத்தப்பட்டு, அவர் அங்குள்ள சேனல்9 டி.வி.யின் வர்னணையாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். பேசி முடித்த உடனே, ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் ஆனார். கேட்ச் செய்த விராட் கோலி, ஸ்டீவன் சுமித்தை நோக்கி, ‘வாய்ஜாலம் முடிந்து விட்டது…. இப்போது வெளியே போகலாம்’’ என்பது போல் செய்கை காட்டி வெறுப்பேற்றினார்.

1453863523779

இந்த நிலையில் ஸ்டீவன் சுமித்தின் ‘மைக்’ பேச்சு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. களத்தில் ஆடிக்கொண்டிருந்த போது, மைக் மூலம் வர்ணனையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் தான் கவனச்சிறதல் ஏற்பட்டு அவர் ஆட்டம் இழந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் ரசிகர்களும் சுமித் மீதான அதிருப்தியை கொட்டி தீர்த்துள்ளனர். ஒரு ரசிகர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘பேசிக்கொண்டிருந்த போது சுமித்தால் சவுகரியமாக பேட் செய்ய முடியவில்லை. இது கோலிக்கு நன்கு தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், ‘சுமித்தை நோக்கி கோலி காட்டிய செய்கை ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தி விட்டது. இது கிரிக்கெட் போட்டி. டெலிவிஷன் நேர்காணல் அல்ல’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, ‘கடந்த சில ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. வீரர்களுக்கு இடையூறு கொடுத்து, ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும் என்பது சேனல்9 டி.வி.யின் நோக்கமாக நிச்சயம் இருக்காது. சூழ்நிலை எப்படி இருந்தாலும் புரிந்து கொண்டு விளையாட வேண்டியது தொழில்முறை வீரர்களின் பொறுப்பு.

இது பொழுது போக்குக்காக செய்யப்படுவது. பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டின் போதும் மைதானத்தில் இருந்து கொண்டே பேசியுள்ளோம். வீட்டில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு களத்தில் இருக்கும் சூழலை நாங்கள் எப்படி கையாள்கிறோம் என்பது புரியும். இதை நான் நீண்ட காலமாக செய்து வருகிறேன். இதனால் எனக்கு கூடுதலாக எந்த நெருக்கடியும் இல்லை. களத்தில் நாங்கள் என்ன சாதிக்க முயற்சிக்கிறோம் என்பதை வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு தெரிவிப்பதை சிறப்பு வாய்ந்ததாக நினைக்கிறேன்.’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.