பழிக்குப்பழி – அக்காவையே கல்லால் அடித்துக்கொன்ற தம்பிகள்

8025ebf0-9f9f-4eb9-bb4f-b09f9bf4e740_S_secvpf

புதுக்கோட்டை அருகே உள்ள உய்யகுடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகள் கோகிலா (வயது 20). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் கோகிலா அவரது வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால் அவரது பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கோகிலா தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கோகிலா இறந்து கிடந்த இடம் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்ம நபர்கள் கோகிலாவை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கல்லால் தாக்கி கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோகிலாவை அவரது சித்தப்பா சின்னத்துரையின் மகன்களான ராஜாக்கிளி (வயது 15), ராமச்சந்திரன் (13) ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கோகிலாவின் கொலையைக் குறித்து விசாரனை நடத்துகையில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. 

கோகிலாவின் தந்தை முருகேசனும், சின்னதுரையும் அண்ணன்–தம்பிகள். இவர்கள் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். சின்னத்துரையின் மகன்களான ராஜாக்கிளி பெருமாநாட்டில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பும், ராமச்சந்திரன் அதே பள்ளியில் 8–ம் வகுப்பும் படித்து வந்தனர். இதனால் இருவரும் முருகேசன் வீட்டிற்கு அடிக்கடி செல்வது உண்டு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத போது 2 பேரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு மேஜையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடியுள்ளனர். அந்த சமயம் அங்கு வந்த கோகிலா அதனை பார்த்து விட்டார். உடனே இது குறித்து சித்தப்பா சின்னத்துரையிடம் கூறியுள்ளார். அவர் ராஜாகிளியையும், ராமச்சந்திரனையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் கோகிலா மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கோகிலா அவரது வீட்டின் பின்புறமுள்ள வயலுக்கு சென்றார். அங்கு கொய்யா மரத்தில் இருந்த பழங்களை பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. அந்த நேரம் அங்கு விளையாடி கொண்டிருந்த ராஜாகிளியையும், ராமச்சந்திரனையும் அழைத்து, கொய்யா பழங்களை பறித்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள், நாங்கள் திருடியதை எங்களது தந்தையிடம் கூறி சிக்க வைத்தது நீதானே என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் கீழே கிடந்த பெரிய கற்களை எடுத்து கோகிலா தலையில் வீசினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெளியேறியது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனிடையே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோகிலாவை யாரும் கவனிக்காததால் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய ராஜாகிளி, ராமச்சந்திரனை கைது செய்து விட்டனர்.

கைதான 2 பேரும் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே கோகிலா கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை காணவில்லை. இதுபற்றி ராஜாகிளி, ராமச்சந்திரனிடம் விசாரிக்கும் போது அவர்கள் தாங்கள் எடுக்கவில்லை என்று கூறினர். எனவே அந்த செயினை யார் எடுத்துள்ளார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவியை பள்ளி மாணவர்கள் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.