கம்ப்யூட்டர் எஞ்சினியர் கொலை 24 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ்

201601220444412481_In-Bangalore-computer-engineer-murdered-woman_SECVPF

பெங்களூருவில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில், 24 மணிநேரத்தில் அரியானாவில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குசுமா ராணி(வயது 31), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர், கடந்த 6 மாதங்களாக பெங்களூரு காடுகோடி பிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவருடன் தோழி ஒருவரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 19–ந் இரவு வெளியே சென்றிருந்த தோழி வீட்டிற்கு திரும்பி வந்தபோது குசுமா ராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளியை காடுகோடி போலீசார், அரியானா மாநிலத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சட்டம்–ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர்(கிழக்கு) ஹரிசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கழுத்தை நெரித்துக் கொலை
கொலை செய்யப்பட்டுள்ள குசுமா ராணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குசுமா ராணிக்கும், ஆகாஷ் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றுவிட்டனர். அதன்பின்னர்தான் குசுமா ராணி பெங்களூருவுக்கு வந்து வேலை செய்து வந்தார்.

பிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.10 ஆயிரம் வாடகைக்கு அவர் வசித்து வந்தார். அவருடன் தோழி நிதிஷ்சர்மாவும் தங்கி இருந்தார். கடந்த 19–ந் தேதி காலையில் நிதிஷ்சர்மா வெளியே சென்ற பிறகு, மதியம் 2 மணியில் இருந்து 3 மணியளவில் குசுமா ராணி கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தை பிளாஸ்டிக் வயரால் நெரித்து கொலை செய்திருந்தனர். அத்துடன் பேனாவின் கூர்மையான முனையாலும் குத்தி இருந்தனர்.

அரியானாவில் கைது
இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கொலை நடந்த 24 மணிநேரத்தில், அரியானா மாநிலத்தில் கொலையாளி சுக்பீர் சிங்(32) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுக்பீர் சிங் அரியானா மாநிலம் பண்ட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். ஆனால் கடந்த 2013–ம் ஆண்டுக்கு பின்பு அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். மேலும் 2011–ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுக்பீர் சிங் வேலை பார்த்துள்ளார். வேலை இல்லாததால் அவர் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

Facebook பழக்கம்
இந்த நிலையில், கடந்த ஆண்டு (2015) டிசம்பர் 31–ந் தேதி ‘பேஸ்புக்‘ சமூக வலைத்தளம் மூலம் குசுமா ராணிக்கும், சுக்பீர் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஜனவரி 1–ந் தேதி 2 பேரும் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகளை கூறி நட்பை வளர்த்து கொண்டனர்.

அதன்பிறகு, கடந்த 9–ந் தேதி அன்று குசுமா ராணி தனது செல்போன் எண்ணை சுக்பீர் சிங்கிடம் கொடுத்துள்ளார். இதனால் 2 பேரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். மேலும் குசுமா ராணியை சந்திக்கவும், வேலை விஷயமாகவும் கடந்த 19–ந் தேதி காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சுக்பீர் சிங் பெங்களூருவுக்கு வந்துள்ளார். அன்றைய தினம் மதியம் 2 பேரும் வீட்டில் சாப்பிட்டு உள்ளனர்.

பணம் கொடுக்க மறுப்பு
அதன்பிறகு, ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கும்படி குசுமா ராணியிடம் சுக்பீர் சிங் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று தெரிவித்து விட்டார். அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து கொடுக்குமாறு குசுமா ராணியிடம் சுக்பீர் சிங் கேட்டதற்கும், அவர் மறுத்துள்ளார். இறுதியாக டெல்லிக்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் மட்டும் தரும்படி கேட்டுள்ளார். அதையும் கொடுக்க முடியாது என்று குசுமா ராணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுக்பீர் சிங், மடிக்கணினியை சார்ஜ் செய்யும் பிளாஸ்டிக் வயர் மூலம் குசுமா ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். மேலும் பேனா மூலம், அவரது கழுத்தில் குத்தி இருக்கிறார். இதனால் சுக்பீர் சிங்கின் ஜீன்ஸ் பேண்ட்டில் ரத்தக் கரைப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். கார்டுகள் கொள்ளை
அதன்பிறகு, குசுமா ராணியின் செல்போன், 3 ஏ.டி.எம். கார்டுகள், செக் புக்கை சுக்பீர் சிங் கொள்ளையடித்து இருக்கிறார். மேலும் குசுமா ராணியின் செல்போனில் இருந்து, அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு பேசி, அவரது ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணையும் பெற்றுள்ளார். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.45 ஆயிரத்தை சுக்பீர் சிங் எடுத்துள்ளார்.

அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சுக்பீர் சிங் சென்று, அங்கிருந்து அரியானாவுக்கு சென்று பதுங்கி இருந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளி கொடுத்த தகவல், குசுமா ராணியின் செல்போனை சுக்பீர் சிங் கொள்ளையடித்து சென்றது, அவரது ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் மூலம் 24 மணிநேரத்தில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்துள்ளனர்.

பெங்களூருவுக்கு அழைத்து வந்து…
முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்காத காரணத்தினால்தான் குசுமா ராணியை சுக்பீர் சிங் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அரியானாவில் இருந்து அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும். அப்போது அவர், குசுமா ராணியை பணத்திற்காகத்தான் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும். இந்த கொலை வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காடுகோடி போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் கூறினார். பேட்டியின் போது துணை கமிஷனர் போரலிங்கய்யா உடன் இருந்தார்.

பெண்ணின்ஜீன்ஸ் பேண்ட்–ஐ அணிந்து தப்பி ஓடிய கொலையாளி
குசுமா ராணியை, சுக்பீர் சிங் கொலை செய்தபோது பேனாவின் கூர்மையான முனையால் அவரை குத்தி உள்ளார். அப்போது சுக்பீர் சிங் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் ரத்தகரை படிந்தது. அந்த பேண்ட்டுடன் வெளியே சென்றால் சிக்கி விடுவோம் என்று பயந்த அவர் தனது பேண்ட்–ஐ கழற்றி போட்டு விட்டு, குசுமா ராணியின் ஜீன்ஸ் பேண்ட்–ஐ அணிந்து கொண்டு பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.