நேதாஜி மறைவு மர்மம் விலகியது

subhas_chandra_bose_jayanti_images_8650620412

நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திர போஸ், இந்திய நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து போராடினார். ஆனால் அவர் ஜப்பானுக்கு செல்லும் வழியில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடந்த விமான விபத்து ஒன்றில் பலியாகி விட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அது இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தன.

இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஏற்கனவே கூறப்பட்டு வந்தபடியே விமான விபத்தில் பலியானது உண்மைதான் என்றும், அவரது உடல் தைவானில் தகனம் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. அவர் உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

நேதாஜியின் தகன ஆவணம், இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தின் எண்.எப்.சி. 1852/6 (ஆண்டு 1956) கோப்பில் இடம் பெற்றுள்ளது. நேதாஜி இறந்தபோது, அவரை தகனம் செய்வதற்கான அனுமதியை தைவான் அதிகாரி டான் டி-டி வழங்கி உள்ளார். இந்த ஆவணத்தை டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம், மத்திய அரசிடம் 1956-ம் ஆண்டு, ஜூலை மாதம் வழங்கி உள்ளது.

தைவானில் இருந்த இங்கிலாந்து துணைத்தூதர் ஆல்பர்ட் பிராங்கிளின் என்பவர், நேதாஜியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு 1956-ம் ஆண்டு, மே மாதம் 15-ந்தேதி தைவான் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதன்பேரில் தைவான் மாகாண அரசின் தலைவர் சி.கே.யென், 1956-ம் ஆண்டு, ஜூன் 27-ந்தேதி, விரிவான போலீஸ் அறிக்கை ஒன்றை அவருக்கு அனுப்பி உள்ளார். அதில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ந்தேதி நேதாஜி உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தைவான் அதிகாரி டான் டி-டியின் வாக்குமூலமும் இணைக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்து துணைத்தூதர் ஆல்பர்ட் பிராங்கிளினுக்கு தைவான் அரசின் தலைவர் யென் எழுதிய கடிதத்தில், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடைந்தது தொடர்பாக ராணுவ ஆஸ்பத்திரி வழங்கிய சான்றிதழ் அடிப்படையில், அவரது உடலை தகனம் செய்வதற்கு சான்று அளிக்கப்பட்டதாக கூறி உள்ளார். தைவான் நகராட்சி சுகாதார மையம், உடல் தகனம் தொடர்பாக ஒரு பதிவேட்டினை பராமரித்து வந்துள்ளது. அதில் தகனம் செய்யப்பட்ட நேதாஜியின் பெயர் ‘இச்சிரோ ஒக்குரா’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேதாஜியின் உடலை ஜப்பான் ராணுவ அதிகாரி ஒரு காரில் எடுத்து வந்ததாகவும், அவருடன் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணம் செய்து உயிர் தப்பிய அவரது படைத்தளபதி கர்னல் ஹபிபுர் ரகுமான் வந்ததாகவும் தைவான் அதிகாரி டான் டி-டி கூறி உள்ளார்.
சவப்பெட்டியில் இருந்து நேதாஜியின் உடலை டான் டி-டியும், லின் சுய் மு என்பவரும் சேர்ந்துதான் எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அந்த சவப்பெட்டியை ஜப்பானுக்கு எடுத்துச்செல்லத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அப்போதைய விமானத்தில் அந்த பெட்டியை எடுத்துச்செல்லுகிற அளவுக்கு வசதி இல்லாததால்தான் தைவானில் தகனம் செய்யப்பட்டதாகவும் டான் டி-டி கூறி உள்ளார்.
நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் மறுநாள், அவரது அஸ்தியை ஜப்பான் ராணுவ அதிகாரி வந்து பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.

டான் டி-டியின் கருத்துகள் யாவும், நேதாஜியின் படைத்தளபதி கர்னல் ஹபிபுர் ரகுமான் அளித்த வாக்குமூலத்துடன் ஒத்துப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நேதாஜியின் உடல் தகன ஆவணத்தை வெளியிட்டுள்ள இணையதள நிறுவனத்தை உருவாக்கிய ஆசிஷ் ராய், “எங்கள் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு மாறாக இந்திய அரசு கூறினால் அது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமையும்” என கூறி உள்ளார். ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ், இந்த ஆவணங்களை பார்வையிட்டு, அனைத்தும் நம்பத்தகுந்த விதத்தில் இருப்பதாக கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.