மதுவிலக்கு முடியவே முடியாது – சட்டமன்ற காரசாரமான விவாதங்கள்

images (6)

மதுவிலக்கு பிரச்சினை தமிழகத்தில் தலைதூக்கியதை அடுத்து அதை எப்படி ஆளுங்கட்சியாளர்கள் சாமர்த்தியமாக கையாளுகின்றார்கள் என்பது மிகவும் புத்திசாலித்தனமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர முடியாது என்று சட்டப் பேரவையில் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வர முன்வந்தால் தான் தமிழகத்தில் அமல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும்போது மதுவிலக்கு தொடர்பாக  விவாதம் நடந்தது. விவாதத்தின் போது, மதுவிலக்கு கொண்டு வர முடியாது என்று அமைச்சர் அறிவித்தார்.

விவாதம் வருமாறு:

விருகம்பாக்கம் பார்த்தசாரதி (தேமுதிக): தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வராதது ஏன்? மது விலக்கு கொண்டு வந்து முன்மாதிரி மாநிலமாக தமிழகம் ஏன் இருக்க கூடாது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஏற்கனவே பல முறை பதில் கூறி விட்டேன். மதுவின் தீமைகளை மற்றவர்களை விட முதல்வர் நன்கு அறிவார். ஆனால் நடைமுறை சூழ்நிலையில் அது சாத்தியம் அல்ல என்பதால் மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை. இதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன கருத்தை நான் இரவல் வாங்கி கூறுகிறேன். நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் இருக்கிறது.

பேரவை திமுக துணை தலைவர் துரைமுருகன்: மது விலக்கை கொண்டு வரப் போகிறீர்களா இல்லையா. அதற்கு பதில் கூறுங்கள்.

நத்தம் விஸ்வநாதன்: சுற்றியுள்ள எந்த மாநிலத்திலும் மது விலக்கு இல்லை. இந்த நிலையில் மது விலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும். அரசு கஜானாவிற்கு வர வேண்டிய வருவாய் சமூக விரோதிகளுக்கு செல்லும். இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி அதனால் கிடைக்கும் வருவாயை ஈடுகட்ட மத்திய அரசு முன்வந்தால் மது விலக்கை அமல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். இந்தியா முழுவதும் மது விலக்கு அமல்படுத்தினால் தான் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியம் ஆகும்.

பெரம்பூர் ஏ. சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.): மது விலக்கு அமல்படுத்த முடியாததற்கு வருமான இழப்பு தான் காரணம் என்கிறார் அமைச்சர்.

நத்தம் விஸ்வநாதன்: பல்வேறு காரணங்களில் அது ஒரு காரணம். நடைமுறை சூழல் தான் முக்கிய காரணம். என் வீட்டு கோழி அடுத்த வீட்டில் முட்டையிடுவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கருணாநிதி கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

துரைமுருகன்:  இந்த அரசு மது விலக்கு கொண்டு வராது. மது விலக்கை எதிர்பார்க்க முடியாது. அது தான் உண்மை. நத்தம் விஸ்வநாதன்: கொண்டு வர மாட்டோம் என்று கூறவில்லை. மத்திய அரசு கொண்டு வந்தால் முதல் மாநிலமாக மது விலக்கை அமல்படுத்துவோம்.

பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த எல்லா திட்டங்களையும் இது போல செயல்படுத்தினால் மகிழ்ச்சி. மது விலக்கை உடனடியாக முடியா விட்டாலும் படிப்படியாக கொண்டு வர பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வழிமுறையையாவது இந்த அரசு கையாளுமா?

வால்பாறை ஆறுமுகம் (இந்திய கம்யூ.): படிப்படியாக கோயில், கல்வி நிலையங்கள் உள்ள பகுதி களில் இருக்கும் மதுக் கடைகளை அகற்றி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

நத்தம் விஸ்வநாதன்: மக்கள் கோரிக்கைளுக்கு ஏற்ப மதுக் கடைகள் அகற்றி வருகிறோம். கோயில், கல்வி நிலையம் அருகில் உள்ள மதுக்கடைகள் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அகற்றப்படும். கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த போது மதுக் கடைகளை அகற்ற முன்வந்தீர்களா? அங்கு ஒரு கொள்கை. இங்கு ஒரு கொள்கையா?

ஏ. சவுந்திரராஜன்: மற்ற மாநிலங்களை விட இங்கு மதுக் கடைகள் அதிகம்.

நத்தம் விஸ்வநாதன்: மற்ற மாநிலங்களை விட குறைவு தான்.

ஒட்டப்பிடாரம் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): கேரளா போல படிப்படியாக மது விலக்கு கொண்டு வர வேண்டும்.

பார்த்தசாரதி: முடியும் முடியாது என்று கூறாமல் யார் கேட்பது என்று கூறுவது சரியல்ல. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்து சொல்லுங்கள். நாட்டு மக்களுக்காக நாங்கள் கேட்கிறோம். முடியும் முடியாது என்று பதில் கூறுங்கள். மதுக்கடையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றவில்லை.

நத்தம் விஸ்வநாதன்: விவரத்தை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.