ஐபிஎல் வெகுவாக கிரிக்கெட்டை மாற்றியுள்ளது – டென்டுல்கர்

download (1)

20 ஓவர் போட்டியின் தாக்கத்தால் கிரிக்கெட் ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது இந்திய முன்னாள் வீரர் தெண்டுல்கர் தெரிவித்தார்.

எம்.ஆர்.எப். நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐ.சி.சி) அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி உள்பட 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி வரை எம்.ஆர்.எப். நிறுவனம் ஸ்பான்சராக இருக்கும்.

சென்னையில் நேற்று நடந்த இதற்கான நிகழ்ச்சியில் ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன், எம்.ஆர்.எப். சேர்மன் மேமன் ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்த பத்திரத்தை மாற்றி கொண்டனர். எம்.ஆர்.எப். தூதர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது 20 ஓவர் உலக கோப்பையும் அறிமுகம் செய்யப்பட்டது.

விழாவில் கலந்துகொண்டு டென்டுல்கர் பேசியது: 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிறகு சென்னைக்கு நான் வந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். சென்னை விமான நிலையத்தில் இருந்து இறங்கி வருகையில் பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதை காண முடிந்தது. கடினமான பாதிப்பில் இருந்து மீண்டு சென்னை பழைய நிலைக்கு வர இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் உதவிகரம் நீட்டி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சோதனையான கால கட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுவது தான் நமது நாட்டின் உண்மையான குணாதிசயம். இதனை நம்மால் சென்னை வெள்ள பாதிப்பின் போதும் பார்க்க முடிந்தது. கடினமான தருணங்களில் நாம் ஒருவருக்கொருவர் உதவும் பண்பு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்புகிறேன்.

20 ஓவர் போட்டியால் கிரிக்கெட் ஆட்டம் பெருத்த மாற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 20 ஓவர் போட்டியில் வேகப்பந்து வீச்சில் கூட பேட்ஸ்மேன்கள் ‘ஷாட் தேர்டுமேன்’ திசையில் ‘ரிவர்ஸ் ஸ்விப்’ ஆடுவதை பார்க்க முடிகிறது. கிரிக்கெட் ஆட்டம் குறித்து அதிகம் அறியாதவர்கள் கூட 20 ஓவர் போட்டியை எளிதாக புரிந்து கொண்டு ரசிக்க முடிகிறது. 3 மணி நேரம் விறுவிறுப்பாக அரங்கேறும் 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவு அளிக்க எல்லோரும் காத்து இருக்கிறார்கள். கடந்த உலக கோப்பை போட்டியில் நான் போட்டியின் தூதுவராக செயல்பட்டதால் நடப்பு சாம்பியன் கோப்பையை தக்க வைக்கும் என்று சொன்னேன். ஆனால் இந்த முறை நான் உலக கோப்பை போட்டியின் தூதுவராக இல்லை. இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் பேசுகையில், ‘டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்துவதால் தவறு இல்லாத முடிவுகளை நடுவர்கள் எடுக்க உதவிகரமாக இருக்கிறது. டி.ஆர்.எஸ். முறைக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் தொழில்நுட்பம் முழு நம்பிக்கைக்குரியதாக இருப்பது தெரியவந்தால் இந்தியா உள்பட எல்லா நாடுகளும் டி.ஆர்.எஸ்.முறையை பின்பற்றும் என்று நம்புகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.