ஐபிஎஸ் அதிகாரியின் காரையே கடத்திட்டாங்க

Delhi_police

நொய்டாவில், நீல நிற சுழல்விளக்கு பொருத்தப்பட்ட ஐபிஎஸ் உயரதிகாரி ஒருவரின் அலுவலக வாகனம் திருடப்பட்டதை அடுத்து, தலைநகர் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் சுட்டுரைப் பக்கத்தில், “இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) ஐஜியின் வாகனம் புதன்கிழமை அதிகாலையில் திருடப்பட்டுள்ளது. உயரதிகாரியின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில் அந்த வாகனத்தில் நீல நிற சுழல் விளக்கும், 2 நட்சத்திரங்கள் கொண்ட பதாகை பொருத்தப்பட்டிருக்கும்.

இஏ01எஅ2915 என்ற பதிவெண் கொண்ட அந்த வெள்ளை நிற டாடா சஃபாரி வாகனத்தை கண்டறிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறியதாவது:

காணாமல் போன வாகனம் குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தக் கோரி அனைத்து டிசிபிக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதை கண்டுபிடிக்க சில தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் காவலர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நொய்டாவில் உள்ள ஐஜி ஆனந்த் ஸ்வரூப்பின் வீட்டில் இருந்து அந்த வாகனம் காணாமல் போயுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் அந்தக் கார் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று ராஜன் பகத் கூறினார்.

முன்னதாக, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான படைத் தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இதேபோன்று காவல்துறை உயரதிகாரி ஒருவரின் வாகனத்தை திருடி, அதை பயன்படுத்தியிருந்தனர்.

தற்போது, குடியரசு தின விழா நெருங்கியுள்ள நிலையில் என்சிஆர் பகுதியில் ஐபிஎஸ் அதிகாரியின் கார் திருடப்பட்டுள்ளது காவலர்களிடையே உஷார் நிலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் தில்லி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.