புகார் பதிவு செய்ய வந்தது அம்மா கால் சென்டர்

amma-call-center-tamilnadu-jayalalitha-అమ్మ-కాల్-సెంటర్

ஏழை-எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வுபெறும் நோக்கத்துடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதல்- அமைச்சரின் தனிப்பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அம்மா அழைப்பு மையம்

பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில், கணினி வழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24/7 மணி நேரமும் செயல்படும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில் ‘‘அம்மா அழைப்பு மையம்” அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

இந்த மையத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் 19-ந் தேதி (நேற்று) காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த மையத்தின் மூலம், பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைக்கப்படும்.

அதுமட்டுமின்றி, எந்த துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம், அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

உயர் அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தா.கி. ராமச்சந்திரன், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவின் சிறப்பு பணி அலுவலர் டாக்டர் சந்தோஷ் பாபு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பாண்டி பஜாரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டுள்ள அம்மா அழைப்பு மையத்தின் ஒரு மையம் சென்னை தியாகராயநகர் பாண்டிபஜாரில் உள்ள வைரம் காம்பிளக்சின் 2-வது மாடியில் சுமார் 50 இணைப்புகளுடன் செயல்படுகிறது.

அம்மா அழைப்பு மையம் குறித்து, கிண்டியை சேர்ந்த முத்தழகி என்ற பெண் கூறும்போது, ‘இதுவரை மக்களின் பிரச்சினைகளை முதல்வரின் தனிப்பிரிவில் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவித்து வந்தோம். தற்போது, இந்த அம்மா அழைப்பு மையத்தின் மூலம் 1100 என்ற எண்ணிற்கு போன் செய்து மிகவும் எளிதாக புகார்களை தெரிவிக்கலாம். இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

இனிமேல் நேரடியாக மக்கள் குறைகளை முதல்வன் பட ஸ்டைலில் முதலமைச்சரின் காதுகளுக்கே கொண்டுச் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published.