இறுதியான வாக்காளர் பட்டியல் வெளியீடு

voting2--621x414

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை(ஜன.20) வெளியிடப்படுகிறது. இருப்பினும், விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து மண்டலம் வாரியாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கோவையைத் தொடர்ந்து, இப்போது மதுரையில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சென்னை, திருச்சியில் நடைபெறும்.
82 ஆயிரம் வாக்குப் பதிவு இயந்திரங்கள்…: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் 8 ஆயிரம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன.

பிகாரில் இருந்து 50 ஆயிரம் இயந்திரங்களும், குஜராத்திலிருந்து 15 ஆயிரம் இயந்திரங்களும், மகாராஷ்டிரத்திலிருந்து 10 ஆயிரம் இயந்திரங்களும் கொண்டு வரப்படுகின்றன. இந்த இயந்திரங்களை வாக்குப் பதிவுக்காகத் தயார் செய்யும் பணி, பிப்ரவரி 1 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறும்.

விடுபட்ட வாக்காளர்களுக்கு வாய்ப்பு…: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (ஜன.20) வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பத்தில் (படிவம்-6) செல்லிடப்பேசி எண் கொடுத்தவர்களுக்கு, பட்டியலில் சேர்க்கப்பட்டதன் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம்.

கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் பட்டியலில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10 நாள்களில் அடையாள அட்டை…: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அடுத்த இரு நாள்களில், புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை அச்சிடும் பணி நிறைவுபெறும். அதன் பிறகு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு 10 நாள்களுக்குள் வழங்கப்படும். புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது எளிதாக இருக்கும்.

புதிய மென்பொருள் அறிமுகம்…: தேர்தலின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கைகளை இணையதளத்தில் கண்காணிக்க புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.

24 மணி நேரத்தில் நடவடிக்கை இல்லையெனில், உயர் அதிகாரிகளுக்கு தகவல் பரிந்துரைக்கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தலின்போது வாகனங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களின் உண்மைத் தன்மையை தேர்தல் அலுவலர்கள் செல்லிடப்பேசியிலேயே அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒப்புகைச் சீட்டுக்கு வாய்ப்பு இல்லை: வரும் தேர்தலில் மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறையைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுமா, தேர்தல் தேதி போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.