கோவையில் கம்பெனி தயாரிப்பு என்று இலவச வெட்கிரைண்டரை விற்று மோசடி

wed grinder

 

பிராண்டட் வெட்கிரைண்டருக்கு பதில் தமிழக அரசின் இலவச வெட்கிரைண்டரை கோவையில் நேற்று விற்ற சம்பவம் பரபரப்பாக உள்ளது.

கோவை கணபதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், தனது குடும்பத்துடன் கோவை காந்திபுரம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு எலட்ரானிக் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு பொருட்கள் வாங்க நேற்று வந்தார். அப்போது அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு குறிப்பிட்ட கம்பெனி பிரான்டின் கிரைண்டர்கள் அட்டைப்பெட்டியில் இருந்து திறந்து வைக்கப்பட்டு இருந்தது. அதை கலைச்செல்வி பார்வையிட்டார்.

அதில் சில மாடல்களை பார்வையிட்ட பின், அதில் ஒரு கிரைண்டரை கலைச்செல்வி வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்தார். அதற்கான தொகையையும் செலுத்தினர். அதன்பின், கடை உரிமையாளர் தன் ஊழியரை அனுப்பி குடோனில் இருந்து சீலிடப்பட்ட கிரைண்டர் பெட்டியை எடுத்து வருமாறு கூறினார். கடை ஊழியரும் எடுத்து வந்தார். அந்த பெட்டியில் தாங்கள் ஆர்டர் செய்த கிரைண்டர் உள்ளது வாங்கிக் கொள்ளுங்கள் என கலைச்செல்வியிடம் கடையின் உரிமையாளர் கூறி அந்த பெட்டியை அளித்தார்.

கலைச்செல்வியும் அந்த சீலிடப்பட்ட கிரைண்டர் பெட்டியை வாங்கிக் கொண்டு கணபதியில் உள்ள வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு வீட்டில் வைத்து கிரைண்டர் பெட்டியை பிரித்து பார்த்த போது, அதில் தான் ஆர்டர் செய்த கிரைண்டருக்கு பதில், தமிழக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் கிரைண்டர் முதல்வர் படத்துடன் இருந்தது.

இதை பார்த்த அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி, உடனே சம்பந்தப்பட்ட கடைக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்த கடை உரிமையாளரிடம் தான் ஆர்டர் கொடுத்த கிரைண்டருக்கு பதில், தமிழக அரசு வழங்கும் இலவச கிரைண்டர் வைத்து தனக்கு விற்கப்பட்டுள்ளது எனக்கூறி, தான் ஆர்டர் செய்த கிரைண்டர் பிராண்டை தருமாறு கேட்டார். இதற்கு கடைக்காரர் எதிர்ப்பு தெரிவித்து கலைச்செல்விக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கலைச்செல்வி அந்த கிரைண்டர் பெட்டியை எடுத்துக் கொண்டு கோவை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் இப்புகார் குறித்து போலீசார் உடனடியாக வழக்குபதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில் அந்த எலக்ட்ரானிக் கடைக்காரரும் கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இதற்கிடையில் காசு கொடுத்து வாங்கிய கிரைண்டருக்கு பதில், இலவச கிரைண்டர் இருந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட பத்திரிகைகாரர்கள் ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

பத்திரிகையாளர்கள் வருவதை பார்த்த போலீசார், இவ்விவகாரம் குறித்து ஏன் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்தீர்கள். இவ்விவகாரம் வெளியே தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என கலைச்செல்வியிடம் மிரட்டல் விடும் தொனியில் போலீசார் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.