அப்துல் கலாம் என்ற பெயரில் புதிய இயக்கம் தொடக்கம்

download (1)

மறைந்த அப்துல்கலாமின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் கலாம் வாரியர்ஸ் என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்கு திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் தலைவராகவும், டைரக்டர் கஸ்தூரி ராஜா பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக ‘கலாம் வாரியர்ஸ்’ என்ற இயக்கம் புதிதாக தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழா நேற்று ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ராமகிருஷ்ண மடத்தின் சாரதானந்தா முன்னிலை வகித்தார்.

விழாவில் திரைப்பட டைரக்டர் கங்கைஅமரன் தலைவராகவும், டைரக்டர் கஸ்தூரிராஜா பொதுச் செயலாளராகவும், நகைச்சுவை நடிகர் மயில்சாமி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கலாமின் பேரன் ஷேக் சலீம், ஒருங்கிணைப்பாளர் சங்கர், வழக்கறிஞர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்பு, கலாம் வாரியர்ஸ் இயக்கத்தின் பொது செயலாளர் கஸ்தூரிராஜா, தலைவர் கங்கைஅமரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் வாழ்ந்த உயர்ந்த மனிதர். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அவர் பேசும் போது கனவு காணுங்கள், விழித்திருந்தே கனவு காணுங்கள், இந்தியா வல்லரசாக கனவு காணுங்கள், விஞ்ஞான இந்தியா உருவாகவும், வளமான இந்தியா உருவாகவும் கனவு காணுங்கள் என இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தினார்.

அது போல வருங்காலம் இளைஞர்கள் கையில் என்றும் கலாம் கூறியுள்ளார். கலாமின் ஆசைப்படியும், அவருடைய லட்சியங்களை நிறைவேற்றும் வகையிலும், இளைஞர்கள் நல்ல வழியில் செல்லும் வகையிலும் ‘கலாம் வாரியர்ஸ்’ என்ற இயக்கம், கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் ஜனவரி 12–ந் தேதி முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

கலாம் வாரியர்ஸ் இயக்கத்தில் 18 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை இளைஞர்களும், மாணவிகளும், பெண்களும் சேரலாம். சுய சிந்தனைகளோடும், இளைஞர்கள் செயல்படுவதற்காகவும், தேசத்திற்கு நல்ல திறமையான இளைஞர்களை உருவாக்குவதற்காகவுமே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது வரை 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சேருவதற்கு ஆர்வமாக உள்ளனர். கல்வியில் சிறந்து விளங்கி மேல் படிப்புக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் மாணவ– மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் இந்த இயக்கம் மேல்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதோடு படிப்பிலோ, ஏதாவது துறைகளிலோ சிறந்து விளங்கும் இளைஞரை தேர்வு செய்து பாராட்டி விருதும் கொடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.